15ம் நூற்றாண்டை சேர்ந்த திருமங்கை ஆழ்வார் சிலையை திரும்ப ஒப்படைக்க இங்கிலாந்திடம் கோரிக்கை

லண்டன்: இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த திருமங்கை ஆழ்வாரின் 15ம் நூற்றாண்டு வெண்கல சிலையை திருப்பி ஒப்படைக்கும்படி, அருங்காட்சியகத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் இருந்து இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பல்வேறு தொன்மையான கலாச்சார, பாரம்பரிய பொருட்கள், நாடு கடத்தப்பட்ட பழங்கால சிலைகளை இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கடந்த 15ம் நூற்றாண்டை சேர்ந்த, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட திருமங்கை ஆழ்வாரின் வெண்கல சிலை ஒன்று இங்கிலாந்தில் உள்ள அஸ்மோலின் அருங்காட்சியகத்தில் இருப்பதை புகைப்படங்களை ஆய்வு செய்தபோது, ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டுபிடித்தார். இதுகுறித்து உடனடியாக அவர்  அஸ்மோலின் அருங்காட்சியகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

இது தொடர்பாக அருங்காட்சியகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சோத்பை ஏல நிறுவனத்திடம் இருந்து, பெல்மோன்ட் என்ற கலெக்டரின் சேகரிப்பில் இருந்த அந்த சிலை  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள அஸ்மோலின் அருங்காட்சியகத்தினரால் கடந்த 1967ம் ஆண்டு ஏலத்தின் மூலம் எடுக்கப்பட்டது. இது குறித்து கடந்த நவம்பரில் ஆராய்ச்சியாளர் ஒருவரின் கடிதம் கிடைக்க பெற்றதும், இந்திய தூதரகத்துக்கு கடந்த டிசம்பரில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள சவுந்தர ராஜ பெருமாள் கோயிலில் கடந்த 1957ம் ஆண்டில் இருந்த அதே வெண்கல சிலை தான், தற்போது அஸ்மோலின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. இது தொடர்பாக, போலீசில் வழக்கு பதிவு செய்த ஆவணங்கள் உள்ளிட்ட தகவல்கள் கோரப்பட்டுள்ளன. அவை கிடைத்த பின்னர், சிலையை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிலையை திருப்பி ஒப்படைக்கும்படி அருங்காட்சியகத்துக்கு இந்திய தூதரக அதிகாரி ருச்சி கானஷ்யாம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அறிக்கையை இணைத்து கடிதம் அனுப்பினார். அதில், `அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள திருமங்கை ஆழ்வாரின் சிலையை திருடிவிட்டு, போலி சிலை கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.அதனால் அதை திருப்பி அனுப்ப வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: