தென்பெண்ணையாறு பிரச்னையை தீர்க்க புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்: 4 மாநிலங்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் கிளையான தென்பெண்ணையாற்றில் கர்நாடக அரசு புதிதாக தடுப்பணை கட்டுவதற்கு தடையில்லை என கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவையும் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் மீண்டும் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், “ இறுதி உத்தரவு வரும் வரை தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து பெண்ணையாறு விவகாரத்தில் இரு மாநில பிரச்னைகளை தீர்க்கும் விதமாக மத்திய அரசு தரப்பில் ஒரு சமரச குழு கடந்த வாரம் அமைக்கப்பட்டது. இந்த குழுவின் கூட்டம் மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் நேற்று நடந்தது. இதில் நான்கு மாநில பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அதேபோல் மத்திய அரசு சார்பில் சுற்றுச்சூழல்துறை மற்றும் விவசாயத்துறையின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் சார்பாக காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், அசோகன் மற்றும் அப்துல்லா கெய்சரி ஆகியோர் கலந்து கொண்டனர். புதுவை, கேரளா மற்றும் கர்நாடகா தரப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நடந்தது. கூட்டத்தின் முடிவில் தமிழக பிரதிநிதிகள் கூறியதாவது: பெண்ணையாறு நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்க புதியதாக நடுவர் மன்றம் கண்டிப்பாக அமைக்க வேண்டும் என தமிழகத்தின் தரப்பில் கூட்ட ஆலோசனையின் போது வலியுறுத்தப்பட்டது. மேலும் இதே கோரிக்கையை புதுவை மாநில அரசும் தெரிவித்தது. ஆனால் எங்களது கோரிக்கைக்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவர், பெண்ணையாறு நீர்பங்கீடு விவகாரம் தொடர்பாக தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களும் தங்களது கோரிக்கைகளை எழுத்துப்பூர்வ அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி, அடுத்த கூட்டம் வரும் மார்ச் 10ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.

Related Stories: