×

பொது இடங்களில் புகைத்தால் கூடுதல் அபராதம் முறையை வரவேற்கிறோம்: ராமதாஸ் அறிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொது இடங்களில் புகைப்பிடிப்போருக்கு விதிக்கப்படும் அபராதத்தை பலமடங்கு உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கதாகும். புகைத்தடை சட்டம் தொடக்கத்தில் சில ஆண்டுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டாலும், காலப்போக்கில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு அதிகபட்சமாக 200 மட்டுமே அபராதமாக விதிக்கப்படுகிறது. சில நேரங்களில் 50 கூட அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

பொதுவெளியில் விடப்படும் புகையில் 7000 வேதிப்பொருட்கள் உள்ளன. இவற்றில் 69 வேதிப்பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.பிறர் இழுத்து விடும் புகையை சுவாசிப்பதால் மட்டும் உலகம் முழுவதும் 6 லட்சம் பேர் இறக்கின்றனர். அவர்களில் 1.30 லட்சம் பேர் இந்தியர்கள். பொது இடங்களில் புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் நிலையில், அதை கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். பொது இடங்களில் புகை பிடிப்போருக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் மத்திய அரசு முடிவு செயல்வடிவம் பெற்றால் அது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பெரும் நன்மையாக அமையும். எனவே, மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் பொது இடங்களில் புகை பிடிப்போருக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் முடிவை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : places ,Ramadas , public places, smoking, extra fines, ramadas
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்