×

நத்தம் மாரியம்மன் கோயிலில் மாசி பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயிலில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு மாசி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. இதனைத்தொடர்ந்து கோயில் முன்புள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியேற்றப்பட்டது. பின்னர் அம்மனுக்கு தீபாராதனைகள் மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தன. இதில் உலுப்பக்குடி கூட்டுறவு பால் பண்ணை தலைவர் சக்திவேல், திண்டுக்கல் மாவட்ட ஆவின் துணைத்தலைவர் சிவலிங்கம், நத்தம் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணக்குமார், கோயில் செயல் அலுவலர் பால சரவணன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் சடகோபி, டாக்டர் திருப்பதி, பூசாரிகள், விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விழா முக்கிய நிகழ்ச்சியாக நாளை அதிகாலை கரந்தமலையில் உள்ள கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடும் பக்தர்கள், அங்கிருந்து தீர்த்தம் எடுத்து வந்து நத்தத்தில் உள்ள சந்தன கருப்பு சுவாமி கோயிலில் ஒன்று கூடுவார்கள். பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க, மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் அழைத்து வரப்படுவார்கள். அங்கு கோயிலில் காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை தொடங்குவார்கள். இதனைத்தொடர்ந்து மயில், சிம்மம், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில், நகர் முக்கிய வீதிகளில் அம்மன் பவனி வருகிறார். விழா முக்கிய நிகழ்ச்சியாக வரும் மார்ச் 10ம் தேதி பக்தர்கள் பூக்குழி இறங்குதல்  நடைபெறுகிறது. மார்ச் 11ம் தேதி காலை மஞ்சள் நீராடுதலும், மாலையில் மாரியம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 12ம் தேதி அதிகாலையில் அம்மன் கோயிலை சென்றடைவதுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோயில் தக்கார் மகேஸ்வரி, செயல்அலுவலர் பாலசரவணன், பூசாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். நத்தம் பேரூராட்சி சார்பில் செயல்அலுவலர் சரவணக்குமார் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் சடகோபி மற்றும் பணியாளர்கள் சுகாதார பணிகளை செய்து வருகின்றனர்.

Tags : celebration ,Natham Mariamman Temple , Natham Mariamman Temple, Masi big festival
× RELATED தி.நகர் அலுவலகத்தில் பாஜ துவக்க தினம் கொண்டாட்டம்