தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்தது அரசு; 600 சீட் கிடைக்க வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள், ஒரு பல் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஆண்டுக்கு 3,500 பேர் வரை படிக்கின்றனர். சென்னைதான், நாட்டின் சுகாதாரத் தலைநகரம் என்று  சொல்லும் அளவுக்கு மருத்துவ வசதிகள் வளர்ந்துள்ளது. வட மாநிலங்களில் உள்ள பலரும் சிகிச்சைக்காக தமிழகம் வரும்நிலைதான் தற்போது உள்ளது. அதேநேரத்தில், ஊரக பகுதிகளில் போதுமான சுகாதார சேவை  கிடைப்பதில்லை. இதனால் கூடுதல் எண்ணிக்கையில் அரசு மருத்துவக் கல்லூரிகள் திறந்தால் மட்டுமே நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஓரளவாவது, மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும். இதனால்  மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது.

Advertising
Advertising

இந்நிலையில், மக்கள்தொகைக்கு ஏற்ப நாட்டில் போதுமான டாக்டர்கள் இல்லாததால், மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நாடு முழுவதும் வரும் 2020-21ம் கல்வியாண்டில் 75 புதிய மருத்துவ கல்லூரிகளை  தொடங்க மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்தது. அதன்படி தமிழகத்தில், ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டு, மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வேண்டிய மாவட்டங்கள் பட்டியல் மத்திய சுகாதாரத்துறைக்கு, தமிழக  சுகாதாரத்துறை அனுப்பியிருந்தது. அதன்படி தமிழகத்தில் 6 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு கடந்த வருடம் அக்டோபர் மாதம் அனுமதி வழங்கியது.

அதன்படி திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகள் புதிய மருத்துவக் கல்லூரிகளுடன் இணைக்கப்படும். ஒவ்வொரு மருத்துவக்  கல்லூரியும் தலா 325 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். அதில் மத்திய அரசு 60 சதவீதம் நிதி வழங்கும். மாநில அரசு 40 சதவீதம் நிதி வழங்க வேண்டும். அதன்படி ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் மத்திய அரசு  195 கோடி வழங்கும், மாநில அரசு 130 கோடி வழங்க வேண்டும். ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி மூலம் ஆரம்பத்தில் தலா 100 சீட்டுகள் வீதம் 600 சீட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் மேலும்  கூடுதல் சீட்டுகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியை வள்ளி சத்யமூர்த்தி,  திருப்பூர் மருத்துவ கல்லூரி முதல்வராகவும், நெல்லை மருத்துவ கல்லூரி பேராசிரியை ரேவதி, விருதுநகர் மருத்துவக்கல்லூரி முதல்வராகவும், சென்னை மருத்துவ கல்லூரி பேராசிரியர் விஸ்வநாதன், நாகை மருத்துவ  கல்லூரி முதல்வராகவும், கோவை மருத்துவ கல்லூரி பேராசிரியை சாந்தா அருள்மொழி, நாமக்கல் மருத்துவக்கல்லூரி முதல்வராகவும், சென்னை மருத்துவ கல்லூரி பேராசிரியை அரசி ஸ்ரீவத்சன், திருவள்ளூர் மருத்துவ  கல்லூரி முதல்வராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: