×

அரசை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது: உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கருத்து

புதுடெல்லி: அரசை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக ஜனநாயகமும் எதிர்ப்புணர்வும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேர்தலில் ஒரு கட்சி 51% வாக்குகளை பெற்றது என்றால் மீதமுள்ள 49% மக்களும் அடுத்த ஐந்து ஆண்டு காலம் எதுவுமே பேசக்கூடாது என்று அர்த்தமல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும் ஜனநாயகத்தில் பங்கு உள்ளது. அரசுகள் எப்போதுமே சரியானவையாக இருப்பதில்லை. ஒரு விஷயத்தில் நீங்கள் வேறுபட்ட கருத்து கொண்டிருப்பதால் நீங்கள் நாட்டை அவமரியாதை செய்வதாக அர்த்தம் கிடையாது.

மாறுபட்ட சிந்தனைகள் உதிக்கும்போதே அங்கு எதிர்ப்புணர்வு உண்டாகும். கேள்வி எழுப்புவது என்பது ஜனநாயகத்தின் வழிவந்த உரிமையாகும். அமைதியான வழிகளை கடைபிடிக்கும் வரை எதிர்க்கட்சிகளுக்கு எப்போதுமே போராடுவதற்கு உரிமை உண்டு. சமீபத்தில் நீதிபதி சந்திராசூட் உரை ஒன்றில் தெரிவித்ததைப் போன்று, எதிர்ப்பவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்துவது ஆராய்ந்தறியும் வகையிலான ஜனநாயகத்தை தடுத்துவிடும். எனவே அரசை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது. குடிமகன்களின் சிவில் உரிமைகளை பாதுகாக்கும் போதுதான் ஜனநாயகம் வெற்றியடைந்ததாகக் கருத முடியும். எதிர்கருத்துக்களுக்கு எப்போதும் முக்கியமான பங்கு உண்டு. அது ஊக்குவிக்கப்பட வேண்டும். நாட்டை வழிபடுத்துவதற்குத் தேவையான நல்ல வழிகளை கண்டறியய அது உதவும். விதிகள் கேள்வி கேட்கப்படும் வரை ஒரு சமூகம் உருவாகாது, என கூறியுள்ளார்.Tags : Deepak Gupta ,Supreme Court Justice ,SC , Supreme Court, Justice, Deepak Gupta, Anti-nationals
× RELATED உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி...