×

குடமுழுக்கு விழாவுக்கு பின் தஞ்சை பெரிய கோயிலில் அலைமோதிய கூட்டம்: நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

தஞ்சை: குடமுழுக்கு விழாவுக்கு பின் தஞ்சை பெரியகோயிலில் விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயிலில் 23 ஆண்டுக்கு பிறகு கடந்த 5ம் தேதி குடமுழுக்கு விழா நடந்தது. அன்றைய தினம் மட்டுமே 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து சமூக வலை தளங்களில், பெரியகோயிலின் கட்டுமானம், கலைநுட்பம், ராஜராஜசோழன் குறித்த தகவல்கள், குடமுழுக்கு விழாவின் படங்கள், வீடியோக்கள் பரவியது. இது பலரையும் பெரிய கோயிலுக்கு வர தூண்டியது. அத்துடன் குடமுழுக்கை காண முடியாத பலரும் கடந்த 6ம் தேதி முதல் நடை பெற்று வரும் மண்டலாபிஷேகத்தில் தரிசனம் செய்து விட வேண்டும் என வருவதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. தொடர்ந்து குடமுழுக்கு முடிந்து 14 நாட்கள் ஆன நிலையில், நேற்று விடுமுறை மற்றும் மாசி அமாவாசையொட்டி பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. சுமார் 3 மணி நேரம் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருவுடையாரை தரிசனம் செய்தனர். மேலும் கோயிலில் உள்ள சிற்பங்கள், ஓவியங்கள், நந்தியம் பெருமான், கரூவூர் சித்தர் உள்ளிட்ட சன்னதிகளில் பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்தனர். கோயில் பிரதான நுழைவு வாயிலில் பக்தர்களையும், அவர்கள் கொண்டு வரும் உடமைகளையும் போலீசார் தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர். வெளியூரிலிருந்து பேருந்து, கார்களில் வந்த பக்தர்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்த போதிய இடமில்லாமல் நீதிமன்ற சாலை, பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே, சிவகங்கை பூங்கா அருகிலும், சீனிவாசபுரம் பகுதியிலும் நிறுத்தியிருந்தனர்.

மேம்பாலத்திலிருந்து சோழன்சிலை வரை அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். இது குறித்து பக்தர்கள் கூறுகையில், தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் வெளிமாவட்ட பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருகிறது. ஆனால் போதிய அளவு குடிநீர் தொட்டிகளில் குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். மேலும் கழிப்பிட வசதிகள் இல்லாததால் முதியோர் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோயிலில் நீண்ட நேரம் வரிசையில் நிற்க முடியாமல் மயக்கம் ஏற்பட்டு சிரமப்படுவதால் தற்காலிக மேற்கூரை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

1 லட்சம் பக்தர்கள்
குடமுழுக்கு விழா முடிந்து 14 நாட்கள் ஆன நிலையில், நேற்று விடுமுறை மற்றும் மாசி அமாவாசையொட்டி பக்தர்கள் கூட்டம் ேநற்று அலை மோதியது. சுமார் 3 மணி நேரம் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருவுடையாரை தரிசனம் செய்தனர். காலை முதல் இரவு வரை 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags : Kudumbamukku Festival ,Tanjore ,darshan ,crowd ,festival ,Kudumbamukku , Tanjore, Big Temple, Alamedia Meeting
× RELATED தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு...