டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம்காந்தனை மார்ச் 4 வரை நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம்காந்தனை மார்ச் 4 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவரையும் 6 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக இதுவரை 47 நபர்கள் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இதில் முக்கிய மூளையாக செயல்பட்ட ஜெயக்குமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி அலுவலக பணியாளர் ஓம்காந்தன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இருவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, இருவரும் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளிலும் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இருவர் மீதும் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பல நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில்  ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர். ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் சிறையில் அடைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வு வழக்கில் கைதான பிரபாகரனுக்கு பிப்ரவரி 28 தேதி வரையும். கார்த்திகேயன், சம்பத், செல்வேந்திரனுக்கு மார்ச் 9 வரை நீதிமன்றக்காவல் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: