வைப்பாறு மல்லம்மாள் கோயில் திருவிழா கோலாகலம் ஆற்றில் ஊற்று தோண்டி தண்ணீரை ஊர்வலமாக எடுத்துவந்த பக்தர்கள்: பல்லாண்டுகளுக்கு பிறகு பரவசம்

குளத்தூர்: குளத்தூர் அருகே வைப்பாறு மல்லம்மாள் கோயில் திருவிழாவில் பொங்கல் வைக்க பல்லாண்டுகளுக்கு பிறகு ஆற்றில் ஊற்று தோண்டி தண்ணீரை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்டனர். தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையையொட்டி அமைந்துள்ள வைப்பாறு கிராமத்தில் மல்லம்மாள் கோயில் திருவிழா ஆண்டுதோறும்  சிவராத்திரியன்று துவங்கி ஒரு வாரம் சிறப்பாக நடைபெறும்.

இதன்படி இந்தாண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு கடந்த 20ம் தேதி காலை அருகேயுள்ள சிப்பிகுளம் கடலுக்கு சென்று புனித நீராடிய பக்தர்கள், தீர்த்த குடங்களில் புனிதநீரை ஊர்வலமாக மேளத்தாளத்துடன் எடுத்து வந்து அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை கோயில் முன் பொங்கலிடும் பொருட்டு ஒரே வகையறாவை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் வைப்பாறு ஆற்றுக்கு சென்று ஊற்று தோண்டி பல்லாண்டுகளுக்கு பிறகு கிடைக்கப் பெற்ற தண்ணீரை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதையடுத்து கோயில் முன் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

பின்னர் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்களின் கும்மியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்சிகள்  நடந்தன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மல்லம்மாள் கோயில் திருவிழாவில் பங்கேற்கும் ஒரே வகையறாவை சேர்ந்த பக்தர்கள் தலைமுறை வரிசைப்படி அணியாக சென்று வைப்பாறு ஆற்றில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுத்து வந்து பொங்கலிடுவர். பல்லாண்டுகளாக பருவமழை பொய்த்ததால் ஆற்றில் நீர் ஊற்று கூட இல்லாமல் வறண்டு போனது. கடந்த ஆண்டு பெய்த மழையால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல்லாண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு ஊற்று தோண்டியபோது தண்ணீர் கிடைத்தது. அதை எடுத்து சென்று மல்லம்மாள் கோயில் முன் பொங்கலிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றனர்.

Related Stories: