ஆற்காடு அருகே சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 மான்கள் பலி

ஆற்காடு: ஆற்காடு அருகே சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 மான்கள் பலியானது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், ஆங்காங்கே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல், அரசு அலுவலகங்கள் முற்றுகை என போராடி வருகின்றனர். அதேபோல், வனப்பகுதிகளில் போதிய தண்ணீர் இல்லாததால் வன விலங்குகள் தண்ணீருக்காக அருகே உள்ள ஊருக்குள் தஞ்சம் அடைகின்றது. அவ்வாறு ஊருக்குள் வரும் மான்கள் சாலையை கடக்கும்போது வாகனத்தில் அடிபட்டும், நாய்கள் கடித்தும் உயிரிழக்கும் சம்பவம் நாள்தோறும் நடந்து வருகிறது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள தென்நந்தியாலம் பூஞ்சோலை நகர் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 3 மான்கள் சாலையை கடக்க முயன்றுள்ளது.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 மான்களும் சம்பவ இடத்திலேயே பலியானது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆற்காடு வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரக அலுவலர் கந்தசாமி மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று 3 மான்களின் சடலத்தை மீட்டு டி.சி.குப்பத்தில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர்கள் 3 மான்களையும் பிரேத பிரிசோதனை செய்தனர். பின்னர், புங்கனூர் காப்பு காட்டில் எரித்தனர். இதுகுறித்து, வனசரக அலுவலர் கந்தசாமி கூறுகையில், ‘அம்மூர் காப்பு காட்டில் மான்கள் அதிகளவில் உள்ளது. அதேபோல் நவலாக் காட்டு பகுதியிலும் மான்கள் அதிகளவில் உள்ளது. இந்த பகுதியில் இருந்து மான்கள் வந்திருக்கலாம். மேற்கொண்டு, மான்கள் காட்டை விட்டு வெளியே வராதபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: