கோழிகளுக்கு கொரோனோ வைரஸ் தாக்கியதாக சமூகவலைதளங்களில் பரவும் வதந்தியால் சென்னையில் கோழி விலை வீழ்ச்சி!

சென்னை: கர்நாடகா மாநிலத்தில் கோழி மற்றும் முட்டை மூலம் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் சென்னையில் கோழி கறி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. கோழி இறைச்சி வழியாக கரோனா வைரஸ் பரவுவதாக அண்மையில் கர்நாடகா மாநிலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்தி பரவியது. இதனால் கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகாவிற்கு இறைச்சி கோழி ஏற்றுமதி செய்ய முடியவில்லை. அதனால் சென்னை சந்தைக்கு தேவைக்கு அதிகமான கோழிகள் வந்துள்ளன. இதனால் சென்னையில் கடந்த மாதம் வரை கிலோ 180 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ பிராய்லர் கோழி இன்று வெறும் 85 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் கடந்த மாதம் வரை 230 ரூபாயாக இருந்த உரித்த கோழியின் விலை தற்போது 160 ரூபாயாக சரிந்துள்ளது. ஆனாலும் இறைச்சி வாங்க ஆட்கள் வருவதில்லை என்று கடைக்கார்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வதந்தியால் இந்த தொழிலை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும், கோழிப்பண்ணை உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் இறைச்சி வியாபாரிகள், தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே வதந்தி தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கோழிகள் அதிகமாக வளர்க்கப்படும் நாமக்கல் மாவட்டத்தின் ஆட்சியர் மேகராஜ், தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். கோழி மற்றும் முட்டை வழியாக உலகத்தில் எங்கேயும் கரோனா வைரஸ் பரவியதில்லை என்றும், மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கே கரோனா பரவும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதையும் மத்திய கால்நடைத்துறை ஆணையர் பிரவீன் மாலிக் தெரிவித்துள்ளார்.

Related Stories: