திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்களை விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்: பாதிக்கப்பட்ட பக்தருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியதால் பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில் பாதிக்கப்பட்ட பக்தருக்கு அரசு மருத்துவமனைக்கு சிக்சிச்சை அளிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக நேற்று மீண்டும் தேனீக்கள் கொட்டும் சம்பவத்தை கட்டுப்படுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள் தோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஞாயிறுக்கிழமை விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் செல்லும் வழியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுரத்தில் இருந்து திடீரென தேனீக்கள் பறந்து வந்தது. இதனால், அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில் வழியாக கோயிலுக்கு வந்த பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து, அந்த வழியாக வந்த பக்தர்களை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்ட தொடங்கியது. தேனீக்களிடமிருந்து தப்பிக்க கை குழந்தையுடன் வந்திருந்த பக்தர்கள், தலை மீது துணியால் போர்த்தியபடி ஓடினர். அப்போது, பக்தர் ஒருவரை தேனீக்கள் கலையரங்கம் வரை விரட்டி  சென்று கொட்டியதால், தேனீக்களிடமிருந்து தப்பிக்க தனது சட்டையை கழற்றி கையில் வீசியபடி ஓடினார். ஆனாலும் அவரை விடாமல் துரத்தி கொட்டியது. இதில் பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதேபோல், அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்து போலீசாரையும் தேனீக்கள் கொட்டியதில் பாதிக்கப்பட்ட போலீசார் வெளியே ஓடிவந்தனர். இதையடுத்து அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயில் இரும்பு கதவுகள் மூடப்பட்டு, பக்தர்கள் செல்ல அனுதிக்கப்படவில்லை. இத்தகைய சம்பவம் கோயில் வளாகத்தில் நடைபெற்றதை கோயில் கண்காணிப்பாளர்கள் அறிந்தும் கண்டும் காணாமல் இருந்தது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்கு கூட நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியதாக உள்ளது என பக்தர்கள் மன வேதனையோடு தெரிவித்தனர்.அண்ணாமலையார் கோயிலில் கடந்த வாரமும் இதேபோல் அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலில் திடீரென பறந்து வந்த தேனீக்கள் பக்தர்களை கொட்டிய நிலையில், தற்போது மீண்டும் நேற்று தேனீக்கள் பக்தர்களை கோயில் வளாகத்தில் விரட்டி கொட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் பக்தர்களை தொடர்ந்து தேனீக்கள் கொட்டி பாதிக்கப்படுவதை தடுக்க கோயில் நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கோயில் வளாகத்தில் பக்தர்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் குறித்து கண்காணிப்பாளர்களிடம் பொதுமக்கள் தெரிவித்தும், அதிகாரிகள் தீயணைப்பு துறையினர் 2 பேர் வருவார்கள் என தெரிவித்து விட்டு எதையும் கண்டுகொள்ளாமல் சென்றனர். கோயிலுக்கு வருமானத்தை மட்டுமே பார்க்கும் அதிகாரிகள் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது, அவர்களுக்கு முதலுதவி வழங்க கூட நடவடிக்கை எடுக்காதது வேதனையாக உள்ளது. திருவிழா காலங்கள், பவுர்ணமி நாட்களில் மட்டும் சுற்றி சுற்றி வலம் வரும் கண்காணிப்பாளர்கள் இந்த சம்பவம் குறித்து தெரிவித்தும் கண்டுகொள்ளாதது வேதனையாக உள்ளது என தெரிவித்தனர்.

Related Stories: