40 ஆண்டுகளுக்கு பிறகு மலர்ந்த நினைவுகள்; தமிழகத்தின் முதல் பெண் போலீஸ் அணியினர் சந்திப்பு: வேலூர் காவலர் பயிற்சி பள்ளியில் நெகிழ்ச்சி

வேலூர்: வேலூர் காவலர் பயிற்சி பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி பெற்ற, தமிழகத்தின் முதல் பெண் போலீஸ் அணியினரின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தில் முதன்முதலாக கடந்த 1981ம் ஆண்டு 2ம் நிலை பெண் காவலர்கள் தேர்வு நடந்தது. இதில் 806 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த 1981ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி முதல் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பயிற்சிகள் தொடங்கியது. 1981ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி பயிற்சி முடிந்து, அனைவருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் பயிற்சி முடித்தவர்களின் திறமையை பார்த்து 650 பேருக்கு கிரேடு-1 பதவியும், 78 பேரை எஸ்ஐயாகவும், 78 பேரை தலைமை காவலர்களாகவும் நியமிக்க உத்தரவிட்டார். அதன்படி, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இவர்களில் சிலர் டிஎஸ்பி வரை பதவி உயர்வு பெற்று ஓய்வுபெற்றுள்ளனர்.

இந்நிலையில், திருநெல்வேலியை சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் போலீஸ் அதிகாரிகள் சிலர் வாட்ஸ் அப் மூலம், பயிற்சி பெற்றவர்களில் சிலரை கடந்த மாதம் தொடர்பு கொண்டனர். மேலும் கடந்த 1981ம் ஆண்டில் பயிற்சி தொடங்கிய நாளான பிப்ரவரி 23ம் தேதி அனைவரும் அதே இடத்தில் சந்திக்கவேண்டும் என முடிவெடுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஓய்வுபெற்ற டிஎஸ்பி டோமினிக் சேவியர் செய்திருந்தார். இதையடுத்து வேலூர் காவல் பயிற்சி பள்ளியில் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சுமார் 200 பேர் வரை வந்திருந்தனர். சந்திப்பின்போது, பணியில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். மேலும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதில் டிஐஜி காமினி கலந்து கொண்டு பேசினார். மதியம் நடந்த நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற டிஜிபி திலகவதி கலந்துகொண்டார்.

ராஜீவ்காந்தி கொலையில் வீரமரணம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை செய்யப்பட்டபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த சந்திரா என்ற பெண் போலீஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் கடந்த 1981ம் ஆண்டுதான் பயிற்சியில் சேர்ந்துள்ளார். இதேபோல், பணியில் இருந்தபோது உயிரிழந்த எலிசபத், ஜான்சிராணி உள்ளிட்டோருக்கு நேற்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்திவரதரும் நாங்களும்

நிகழ்ச்சியில் பேசிய ஓய்வுபெற்ற பெண் போலீஸ் ஒருவர், ‘காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்து காட்சியளித்தார். அதேபோல் பயிற்சியில் இணைந்த நாங்கள், 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் இணைந்துள்ளோம்’ என்றார்.

நீங்காத நினைவுகள்

வேலூரில் முன்கூட்டியே அறிவித்தபடி நேற்று மின்வெட்டு செய்யப்பட்டிருந்தது. இதனால், டிஐஜி காமினி மைக் இல்லாமல் பேசினார். அப்போது ஓய்வு பெற்ற பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், ‘நாங்கள் முதன் முதலில் பயிற்சியில் இணைந்தபோது இந்த திப்பு மகாலில் மின் இணைப்பு இல்லை. இதே இடத்தில் நாங்கள் இணையும்போது, மின்சாரம் இல்லாமல் போனது மீண்டும் பயிற்சிக்கு வந்தது போன்ற நினைவாக உள்ளது. அதேபோல், பூஜையே இல்லாத கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில், நாங்கள் வந்தபிறகுதான் பூஜை ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது’ என்றார்.

Related Stories: