கொரோனா வைரஸ் பீதி காரணமாக மன்னரின் பிறந்தநாள் விழாவை ரத்து செய்த ஜப்பான் அரசு!

ஜப்பான்: கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஜப்பான் மன்னரின் பிறந்த நாள் விழாவையொட்டி மக்கள் கூடும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் உருவாகிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் 28 நாடுகளில் பரவியிருக்கிறது.

வைரஸ் பரவுவதை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதேபோல், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. சீனாவுக்கு விமான சேவையை பல நாடுகள் ரத்து செய்துள்ளன. ஜப்பானிலும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், ஜப்பான் மன்னர் நருஹிட்டோவுக்கு நேற்று 60வது பிறந்த நாள் ஆகும். வழக்கமாக மன்னரின் பிறந்த நாள் விழா ஜப்பான் முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டும். மன்னரின் அரண்மனைக்கு அருகில் ஏராளமானோர் திரண்டு நின்று வாழ்த்து தெரிவிப்பார்கள். இந்த நிலையில், கொரோனா பீதி காரணமாக நேற்று மன்னரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எளிமையாகவே நடந்தன. அரண்மனை அருகே மக்கள் கூடும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

Related Stories: