×

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

தூத்துக்குடி: குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தைரோடு சோதனை சாவடியில் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி இரவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பயங்கரவாதிகள் வில்சனை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக திருவிதாங்கோடு அடப்புவிளை பதார் தெருவை சேர்ந்த அப்துல் சமீம் (29), நாகர்கோவில் கோட்டார் மாலிக்தினார் நகரை சேர்ந்த தவுபிக் (27) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். குற்றவாளிகள் மீது உபா சட்டமும் பாய்ந்தது.

இதற்கிடையே அப்துல் சமீம் மற்றும் தவுபிக் ஆகியோர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரு வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற அனுமதி கேட்டு தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதிக்கும், கோர்ட்டுக்கும் மனு அளித்தனர். இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி மற்றும் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.  கொலை வழக்கு தொடர்பாக குமரி மாவட்ட போலீசார் சேகரித்து வைத்திருந்த ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் மொய்தீன் பாத்திமா என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான ஷமீம், தவுபிக் இருவரும் பாத்திமா வீட்டில் தங்கி இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் நெய்வேலி, பரங்கிப்பேட்டை, கொள்ளுமேடு, மேல்பட்டாம்பாக்கம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்துல் ஹமீது, ஜாபர் அலி, காஜா மொய்தீன் ஆகியோர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : raid Officers ,SIS Wilson ,NIA , SIS Wilson Murder Case, Thiruchendur, Kayalpattinam, NIA Officers, test
× RELATED பெங்களூருவில் ராமேஸ்வரம் கபே...