×

பல்லாவரம் மாலிக் தெரு சந்திப்பு அருகே ஜிஎஸ்டி சாலையில் மண் குவியல்: போக்குவரத்துக்கு இடையூறு

தாம்பரம்: குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் குவித்துள்ள மண் மற்றும் கட்டிட இடிபாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட மாலிக் தெரு - குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை சந்திப்பு அருகே சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீரை கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட மண் மற்றும் கான்கிரீட் கழிவுகளை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை ஓரம் மலை போல் குவித்து வைத்தனர். பின்னர் பணிகள் முடிவடைந்து பல நாட்களாகியும் அங்கிருந்து மண் மற்றும் கட்டிட கழிவுகளை அகற்றவில்லை. இதனால் அருகில் உள்ள வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களுக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த வழி இல்லாமல் ஜிஎஸ்டி சாலையிலேயே நிறுத்தி விடுகின்றனர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுபற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை வாகன ஓட்டிகள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை ஓரம் கான்கிரீட் கழிவுகள் குவித்துள்ளதால், வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாமல் பொதுமக்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மண் மற்றும் கான்கிரீட் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்’’ என்றனர்.

Tags : GST road ,junction ,Pallavaram Malik Street ,Malik Street junction , Pallavaram, Malik Street junction, GST road, mud pile
× RELATED நடு வழியில் திடீர் பிரேக் டவுன்; 3...