கடம்பத்தூர் அடுத்த கொண்டஞ்சேரி பகுதியில் மணல் கடத்தலால் பாழாகும் கூவம் ஆறு: நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது வேடிக்கை பார்க்கும் போலீசார்

சென்னை: திருவள்ளூர் அடுத்த, மப்பேடு போலீஸ் நிலைய எல்லைக்குள் உட்பட்ட கொண்டஞ்சேரி கூவம் ஆற்றில் மணல் கடத்தும் சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளது. இதை தடுத்து, நிலத்தடி நீர் மட்டத்தையும், நீர் ஆதாரத்தையும் பாதுகாக்க மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டில் இருந்து உற்பத்தியாகிறது கூவம் ஆறு. இந்த ஆறு, பேரம்பாக்கம், கொண்டஞ்சேரி, கடம்பத்தூர், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக பயணித்து மதுரவாயல், அரும்பாக்கம் வழியாக வங்கக்கடலில் கலக்கிறது. இந்த ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து, கரையோரம் உள்ள ஏராளமான ஊராட்சிகளின் குடிநீர் தேவைக்காக, கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக வறண்ட நிலையில் கிடக்கும் கூவம் ஆற்றில் நீர் இல்லாததால், தேங்கி கிடக்கும் மணலை திருடி வருகின்றனர்.

குறிப்பாக மப்பேடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட நரசிங்கபுரம், பேரம்பாக்கம், கொண்டஞ்சேரி, மேட்டுக்கண்டிகை ஆகிய பகுதிகளில், இரவு நேரங்களில் லாரிகள், டிராக்டர்களில் மணல் திருட்டு அமோகமாக நடந்துவருகிறது. ஆனால், மப்பேடு போலீசார் இதை கண்டும், காணாமல் உள்ளதாகவும், இதற்கென தினமும் குறிப்பிட்ட தொகையை மணல் கடத்துபவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மணல் கடத்தல் குறித்து அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தாலும், மணல் கடத்துபவர்களிடம் அத்தகவலை போலீசார் கூறுவதாகவும் மக்கள் கூறுகின்றனர். ஆனால், அவசர தேவைக்கு மொபெட்களில் சிமென்ட் மூட்டைகளில், மணல் கொண்டு செல்பவர்களை மட்டும் பிடித்து கணக்குக்காக வழக்கு பதிகின்றனர். இரவு நேரங்கள் மட்டுமின்றி, அதிகாலை நேரத்திலும் மணல் திருட்டு தொடர்ந்து அச்சமின்றி நடைபெறுகிறது. இதை அவ்வழியாக ரோந்து செல்லும் போலீசாரும் கண்டும், காணாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மணல் திருட்டு சம்பவம் கொடிகட்டிப் பறக்கிறது. தொடரும் மணல் திருட்டால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது.

Related Stories: