முதல்வர் எடப்பாடியுடன் கருணாஸ் எம்எல்ஏ சந்திப்பு

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சலையில் உள்ள அவரது இல்லத்தில் எம்எல்ஏ கருணாஸ் திடீரென சந்தித்து பேசினார். அப்போது, தனது 50வது பிறந்தநாளையொட்டி முதல்வரிடம் கருணாஸ்  வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து அவர், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டப்பேரவையில் சட்டமுன்வடிவு நிறைவேற்றியதற்காக முதல்வருக்கு நன்றி கூறினார்.இந்த சந்திப்புக்கு பின்னர் எம்எல்ஏ கருணாஸ் கூறுகையில், ‘‘டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன். மேலும் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் யாரும்  பாதிக்கப்பட மாட்டார்கள் என முதல்வர் என்னிடமும் உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தால் எந்த பாதிப்பும் இல்லை. முதலமைச்சரின் உறுதி மீது இஸ்லாமியர்கள் நம்பிக்கை வையுங்கள். திரௌபதி  படத்தில் தவறாக ஏதும் சொல்லவில்லை. நடந்ததைத்தான் அதில் கூறியிருக்கிறார்கள். நாடகக் காதல் இருப்பது உண்மைதான். எல்லா சாதியிலும் மதத்திலும் இது உள்ளது. தவறு செய்தவர்கள் எந்த சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும்  அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்றார்.

Related Stories: