×

முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பு அதிகாரிகள் மீது தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

சென்னை: முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து பாதுகாப்பு ஒத்திகை நடத்திய அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையிலும் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை அவ்வப்போது நடத்தப்படுகிறது. அதன் ஒருபகுதியாக, சென்னை  ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்குள் தீவிரவாதிகள் புகுந்தால், அவர்களிடம் இருந்து பணயக் கைதிகளை மீட்பது தொடர்பான காவல்துறையின் ஒத்திகை நடவடிக்கை ‘மார்க் டிரில்’ என்ற பெயரில் நடந்தது.

இந்த ஒத்திகையின்போது தீவிரவாதிகள் முஸ்லிம்கள் போல் ஒட்டுத்தாடியுடன் சித்தரிக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் வலம் வரும்  மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஒத்திகை மூலம் முஸ்லிம்கள் குறித்த தவறான  பிம்பத்தை, அச்சத்தை பொதுமக்கள் மத்தியில் காவல்துறை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட்ட சமூத்தினரை தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தும் இந்நிகழ்வு கண்டிக்கத்தக்கது.பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகையானது மக்களிடம் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஆனால், சென்னை காவல்துறை நடத்திய மார்க் டிரில் ஒத்திகையானது தாடி  வைத்த முஸ்லிம்கள்தான் தீவிரவாதிகள், தீவிரவாதிகள் முஸ்லிம்களை போல் தான் வருவார்கள் என்ற மிகமோசமான எண்ணத்தை திணிப்பது போல் அமைந்துள்ளது. மருத்துவமனையில் நடந்த முஸ்லிம்கள் மீதான சந்தேகத்தை  ஏற்படுத்தும், வெறுப்பை அதிகரிக்கும் பாதுகாப்பு ஒத்திகையை நடத்திய அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : government ,party ,SDBI ,Tamil Nadu ,extremists ,Muslims , Portraying ,Muslims , Tamil Nadu government , insists
× RELATED பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க உறுதியேற்போம்: திருமாவளவன் அறிக்கை