காவிரி டெல்டா வேளாண் பாதுகாப்பு மண்டலம் மத்திய, மாநில அரசுகள் கபட நாடகம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மதுரை: காவிரி டெல்டா வேளாண் பாதுகாப்பு மண்டலம் அறிவிப்பில் மத்திய, மாநில அரசுகள் கபட நாடகம் ஆடுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.மதுரை, ஒத்தக்கடை மைதானத்தில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் பல்லாயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழா நேற்று மாலை நடந்தது. மேடையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு  பொன்னாடை போர்த்தி ராஜகண்ணப்பன் திமுகவில் இணைந்தார். ராஜகண்ணப்பன் தனது அறக்கட்டளையில் இருந்து ₹50 லட்சத்துக்கான காசோலையை கலைஞர் அறக்கட்டளைக்கு, ஏழைகளின் நலனுக்காக வழங்குவதாக அறிவித்து  மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.இதைத்தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:திமுகவில் இணைந்த ராஜகண்ணப்பனையும், அவரோடு இணைந்தவர்களையும் வரவேற்கிறேன். தமிழகத்தில் எடப்பாடி ஆட்சியை வேரோடும், மண்ணோடும் வீழ்த்தும் நேரத்தில் நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். அரசு பெயரில் கடன் வாங்குவது,  அதை கொள்ளையடிப்பது ஆகிய இரண்டு வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசின் இந்த ஆண்டு பட்ஜெட்டில், தமிழகத்தின் நிதிநிலைமை கோமா நிலையில் இருப்பது வெளிப்பட்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சியை அவர்களே  ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். 8.17 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, 7.27 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆட்சி முடிவடையும் கடைசி காலக்கட்டத்தில், ஜெயலலிதா மீது திடீர் பாசம் வந்துள்ளது. ஜெயலலிதா பிறந்தநாளை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடுவோம் என முதல்வர் அறிவித்துள்ளார். பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்  என்று கொண்டாடுவதற்கு இந்த அரசுக்கு தகுதியோ, அருகதையோ உண்டா?கடந்த ஆண்டு சென்னை பள்ளிக்கரணையில், துணைமுதல்வர் ஓபிஎஸ் பங்கேற்ற அதிமுக பிரமுகர் விழாவில், சாலையில் வைத்த பேனர் சரிந்து, சுப என்ற இளம்பெண் மீது விழுந்து, லாரி ஏறி உயிரிழந்தார். நான் நேரில் சென்று,  குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினேன். ஆனால், ஆளும் அதிமுக ஆறுதலும் கூறவில்லை. நிதியும் வழங்கவில்லை.கோவையில் அனுராதா என்ற இளம்பெண் பேனர் சரிந்து விழுந்து, ஒரு காலை இழந்தார். அவரை நீதிமன்றம் செல்லவிடாமல் மிரட்டி, புகார் கொடுக்கவிடாமலும் தடுத்து விட்டனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இந்த ஆட்சியில்  தண்டனை கிடைப்பது இல்லை. பெண்களுக்கு எதிரான வழக்குகளில் 15.6% மட்டுமே தீர்ப்பு வந்துள்ளது. 1,073 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். 6,330 பேர் குற்றவாளிகள் இல்லை என விடுதலையாகி உள்ளனர். ஏனென்றால், அந்த வழக்குகளை  காவல்துறை சரியான முறையில் கையாளவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். முதல்வர் எடப்பாடி பல்வேறு அவதாரங்கள் எடுக்கிறார். நான் விவசாயி என்கிறார். எத்தனை அவதாரம் எடுத்தாலும் அவரை  விவசாயிகள் ஏற்க தயாராக இல்லை.  விவசாயிகள் கை நகத்தில் மண் படிந்திருக்கும். இவர் கையில் மண் இல்லை. ஊழல் கறை தான் படிந்துள்ளது.

காவிரி டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்று அறிவித்திருக்கிறார்கள். இதற்கு மத்திய அரசின் அனுமதி பெற்றார்களா? ஏற்கனவே அங்கிருக்கும் ஹைட்ரோகார்பன் திட்ட கிணறுகள் என்னவாகும்? அது மூடப்படுமா என்று  தான் நாம் கேட்கிறோம். மதுவிலக்கை அமல்படுத்துகிறோம் என்று அறிவித்து விட்டு, தற்போதுள்ள மதுக்கடைகள், அப்படியே இருக்கும் என்று ெசால்வது எவ்வளவு முட்டாள்தனமோ, அதேபோல் தான், காவிரி வேளாண் பாதுகாப்பு மண்டலம்  என்று அறிவித்து, ஹைட்ரோகார்பன் கிணறுகளை மூடமாட்டோம் என்பதும். இதில் மத்திய, மாநில அரசுகள் கபட நாடகம் ஆடுகின்றன. இது எடப்பாடி செய்யும் பச்சைத்துரோகம். இவ்வாறு அவர் பேசினார்.

மு.க.ஸ்டாலின் சொன்ன குட்டிக்கதை

கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘எடப்பாடி பழனிசாமி அடிக்கடி கதை சொல்கிறார். நான் ஒரு கதை சொல்கிறேன். ஒரு அழகான தோட்டத்தில் நூற்றுக்கணக்கான குரங்குகள் இருந்தன. அங்கு ஒரு தோட்டக்காரன், தினமும் தண்ணீர்  பாய்ச்சிக்கொண்டிருந்தான். அதை பார்த்துக்கொண்டிருந்த குரங்குகள், தண்ணீர் பாய்ச்சும் தோட்டக்காரனுடன் நண்பராகின. ஒரு நாள் தோட்டக்காரன் இறந்து விட்டான். குரங்குகள் தண்ணீர் பாய்ச்ச முடிவெடுத்து, பெரிய வேருள்ள செடிக்கு அதிக  தண்ணீரும், சிறிய வேருள்ள செடிக்கு கொஞ்சம் தண்ணீரும் ஊற்றலாம் என்றன. அதன்படி ஊற்றின. ஆனால், தோட்டம் கருகியது. காரணம், பெரிய வேர், சிறிய வேர் என கண்டுபிடிக்க குரங்குகள் செடிகளை பிடுங்கி பார்த்து விட்டன.  எடப்பாடியின் ஆட்சியும் அப்படித்தான் இருக்கிறது. புத்தியில்லாதவர்கள் கையில் ஆட்சியை கொடுத்தால், இப்படித்தான் இருக்கும். கதைகள் கூறி வரும் எடப்பாடி ஆட்சியின் கதையும் முடியப்போகிறது. அதற்கு நீங்கள் தயாராகுங்கள்’’ என்றார்.

Related Stories: