×

ஐஎஸ் ஆதரவாளர்கள் பதுங்கல்? என்ஐஏ அதிகாரிகள் சேலத்தில் விசாரணை

சேலம்: சேலத்தில் என்ஐஏ அதிகாரிகள், 3 குழுவாக முகாமிட்டு ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் பதுங்கியுள்ளார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தவுபீக், அப்துல் சமீம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு உதவிய 4  பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் தொடர் விசாரணையில் ஈடுபட்டிருந்த என்ஐஏ அதிகாரிகள் நேற்று 3 குழுக்களாக சேலம் வந்தனர். அவர்கள், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பகுதியில் ஒரு குழுவாகவும், மாநகர பகுதியில் 2 குழுவாகவும் பிரிந்து  முகாமிட்டு ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நபர்களை தேடி இந்த குழுவினர் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலையில் கைதான தவுபீக்,  அப்துல் சமீம் ஆகிய இருவரும் பெங்களூரு, கொச்சின் பகுதியை சேர்ந்த சிலருடன் போனில் பேசியுள்ளனர். பெங்களூருவில் தொடர்பில் இருந்த நபர்கள், தற்போது சேலத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வந்து, தேடுதல்  வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
என்ஐஏ அதிகாரிகள் உள்ளூர் போலீசாரின் உதவியையும் நாடி உள்ளனர். மிக குறைந்த அளவில் உள்ளூர் போலீசாரை உடன் அழைத்துச்சென்றுள்ளனர். சந்தேகப்படும் சிலரின் வீடுகளில் சோதனையிடவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.  என்ஐஏ அதிகாரிகளின் இந்த ரகசிய விசாரணை சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : supporters ,Salem ,NIA , supporters ,lurking?,Salem
× RELATED வலசையூரில் குடும்ப தகராறில் கடைக்குள் புகுந்து தாய், மகன் மீது தாக்குதல்