×

வேலூர் காவலர் பயிற்சி பள்ளியில் நெகிழ்ச்சி முதல் பெண் போலீஸ் அணியினர் 40 ஆண்டுகளுக்குப்பின் சந்திப்பு

வேலூர்: வேலூர் காவலர் பயிற்சி பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி பெற்ற, தமிழகத்தின் முதல் பெண் போலீஸ் அணியினர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.தமிழகத்தில் முதன்முதலாக கடந்த 1981ம் ஆண்டு 2ம் நிலை பெண் காவலர்கள் 806 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் 1981 பிப்ரவரி 23ம் தேதி முதல் இவர்களுக்கான பயிற்சிகள்  தொடங்கியது. 1981 ஆகஸ்ட் 12ம் தேதி பயிற்சி முடிந்து, அனைவருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் பயிற்சி முடித்தவர்களின் திறமையை பார்த்து 650 பேரை கிரேடு-1 ஆகவும், 78 பேரை எஸ்ஐயாகவும், 78 பேரை தலைமை காவலர்களாகவும் நியமிக்க உத்தரவிட்டார். அதன்படி, பணி நியமன ஆணைகள்  வழங்கப்பட்டன. இவர்களில் சிலர் டிஎஸ்பி வரை பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றுள்ளனர்.

இந்நிலையில், திருநெல்வேலியை சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் போலீஸ் அதிகாரிகள் சிலர் வாட்ஸ் அப் மூலம், தங்களோடு பயிற்சி பெற்றவர்களில் சிலரை கடந்த மாதம் தொடர்பு கொண்டனர். மேலும் 1981ல் பயிற்சி தொடங்கிய நாளான  பிப்ரவரி 23ம் தேதி அனைவரும் அதே இடத்தில் சந்திக்க முடிவெடுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஓய்வுபெற்ற டிஎஸ்பி டோமினிக் சேவியர் செய்திருந்தார்.இதையடுத்து வேலூர் காவலர் பயிற்சி பள்ளியில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சுமார் 200 பேர் வரை வந்திருந்தனர். சந்திப்பின்போது, பணியில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை மலரும் நினைவுகளாக பகிர்ந்துகொண்டனர்.  மேலும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதில் டிஐஜி காமினி கலந்து கொண்டு பேசினார். மதியம் நடந்த நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற டிஜிபி திலகவதி கலந்துகொண்டார்.

ராஜிவ்காந்தி கொலையில் வீரமரணம்
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை செய்யப்பட்டபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த சந்திரா என்ற பெண் போலீஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். இவரும் 1981ல்தான் பயிற்சியில் சேர்ந்துள்ளார்.  இதேபோல், பணியில் இருந்தபோது உயிரிழந்த எலிசபத், ஜான்சிராணி உள்ளிட்டோருக்கும் நேற்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.



Tags : woman police team ,Vellore Police Training School ,police team , Flexibility ,Vellore, Police ,Training School
× RELATED 63வது தடகள போட்டியில் 45 பதக்கங்கள்...