கோவையில் கள்ளநோட்டு தயாரித்த 3 பேர் சிக்கினர்

கோவை: கோவையில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை கணபதி அருகேயுள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை சரவணம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நடமாடிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பேக்கை  சோதனையிட்டனர். அதில், 60 ஆயிரம் ரூபாய் இருந்தது. தீவிரமாக ஆராய்ந்ததில் கள்ள ரூபாய் நோட்டு என தெரியவந்தது. இதன்பின், கிதர்முகம்மது (66), மகேந்திரன் (39), சூர்யகுமார் (30) ஆகியோரை கைது செய்தனர். சூர்யகுமார் கணுவாய்  பகுதியில் இ சேவை மையம் நடத்தி வருகிறார். இவர் பல்வேறு தேவைக்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடனால் தவித்து வந்துள்ளார். தனக்கு பழக்கமான கிதர் முகம்மதுவிடம் கடன் பிரச்னை தீர ஆலோசனை கேட்டுள்ளார்.  கிதர்முகம்மது கள்ள ரூபாய் நோட்டு தயாரிப்பதில் கில்லாடி. கள்ள ரூபாய் நோட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று வௌியே வந்தவர். இவர் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்தால் பிரச்னை தீரும். ஆனால் கவனமாக செயல்படவேண்டும்  என சூர்யகுமாருக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

இதற்காக ரூபாய் நோட்டு அச்சடிக்கும் வகையிலான தாள்கள், கம்ப்யூட்டர், பிரிண்டர் போன்றவற்றை வாங்கியுள்ளனர். 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுக்களை ஒரிஜினல்போல் அச்சடித்துள்ளனர். இவற்றில் 200 ரூபாய் கள்ளநோட்டுக்களை 3  பேரும்  எடுத்து கொண்டு காந்திபுரத்தில் பொருட்களை வாங்க சென்றபோது போலீசில் பிடிபட்டுவிட்டனர். இவர்களின் வீடுகளில் சோதனையிட்டபோது 3.24 லட்ச ரூபாய்க்கு கள்ள நோட்டுக்கள் இருந்தது. மேலும் ஒரிஜினல் ரூபாய் நோட்டில்  உள்ளது போல் மகாத்மா காந்தி படம், நீரோட்டம், ரூபாய் நோட்டிற்கு இடையே வெளிச்சத்தில் தெரியும் வகையிலான ஒளிரும் பகுதி போன்றவை சரியாக பொருந்தும் வகையில் அச்சடித்துள்ளனர். இவர்களின் பின்னணியில் உள்ள நபர்கள்,  இதுவரை எவ்வளவு பணத்தை புழக்கத்தி–்ல் விட்டார்கள் என போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: