பவானி அருகே 1,200 ஆண்டுக்கு முந்தைய ஏரி கண்டுபிடிப்பு

ஈரோடு:  ஈரோடு  மாவட்டம் பவானி அருகே பிரம்மதேசம் கிராமத்தில் கல்லாம்பாறை பகுதியில் உள்ள  ஒரு ஓடைக்கு அருகில் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பகுதியில் கி.பி.8ம்  நூற்றாண்டை சேர்ந்த ஒரு ஏரி  இருந்ததும், கொங்கு மண்டலத்தின் மிகவும்  பழமையான ஏரி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர் புலவர் ராசு கூறியதாவது: கல்வெட்டில் ‘செருக்கலி நாடாளரால் பணிக்கப்பட்டது’ என கூறப்பட்டுள்ளது. ஏரியின் கரை ‘சிறை’ என்றும், ஏரியின் நீர்வெளியேறும் மதகு  ‘வாய்’ என்றும் கூறப்பட்டது. ஏரிபோல கரைகளுக்கு நட்டன் சிறை, மதகுகளுக்கு  நட்டன் வாய் என்று  அழைக்கப்பட்டது.

இந்த ஏரியின் பயனை  நாடாளரின் வழியினராகிய ‘மக்கள் மக்கள், பேரர் பேரர்’ அல்லாமல், வேறு  யாராவது அனுபவித்தால், அவர்கள் வம்சம் அற்றுப்போவார்கள். அதாவது நாடாளரின்  வம்சத்தினர் அனுபவித்ததாக  குறிப்பிடப்பட்டு உள்ளது. பிற்காலத்தில் 8 ஆறுகளில் 90  அணைகள் கட்டி நீர்ப்பாசன வசதி பெருக்கிய கொங்கு மக்களின் தொடக்க முயற்சியை  இது காட்டுகிறது. இவ்வாறு புலவர் ராசு கூறினார்.

Related Stories: