தளபதிக்கு அமெரிக்கா அனுமதி மறுத்ததால் அதிருப்தி: போர் குற்ற தீர்மானத்தில் இருந்து வெளியேற இலங்கை அரசு முடிவு

கொழும்பு: இலங்கை ராணுவ தளபதி குடும்பத்தினர், அமெரிக்க செல்ல அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தையடுத்து, போர் குற்றம் தொடர்பான ஐ.நா தீர்மானத்தில் இருந்து வெளியேறும் முடிவை இலங்கை நாளை மறுநாள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. இலங்கை ராணுவ தளபதியாக இருப்பவர் லெப்டினென்ட் ஜெனரல் சில்வா. கடந்த 2009ம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடான இறுதி கட்ட போரில் ஈடுபட்ட ராணுவப் படைப்பிரிவுக்கு இவர்தான் தலைமை தாங்கினார். இந்த இறுதிகட்ட போரில் 45 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கை தெரிவித்தது. இதில் இருதரப்பினர் மீது போர் குற்றம் சுமத்தப்பட்டது. இந்த போர் குற்றம் குறித்து விசாரிக்க ஐ.நா மனித உரிமை அமைப்பு கடந்த 2015ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட 11 நாடுகள் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தன.

Advertising
Advertising

இதற்கு அப்போதைய இலங்கை அதிபர் சிறிசேன அரசும் ஒப்புக் கொண்டது. இதன்படி இந்த போர் குற்றம் குறித்து வெளிநாட்டு நீதிபதிகள், வக்கீல்கள் அடங்கிய குழு சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். இந்நிலையில், இலங்கை ராணுவ தளபதி சில்வா மற்றும் குடும்பத்தினர் சமீபத்தில் அமெரிக்கா செல்ல முடிவு செய்தனர். போர் குற்றத்தை காரணம் காட்டி, சில்வாவுக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்தது. இதற்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கு பதிலடியாக, போர் குற்ற விசாரணைக்காக கொண்டு வரப்பட்ட ஐநா தீர்மானத்தில் இருந்து வெளியேற இலங்கை முடிவு செய்துள்ளது. ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் நாளை மறுநாள் உரையாற்றுகிறார். அப்போது போர் குற்றம் தொடர்பான ஐ.நா தீர்மானத்தில் இருந்து இலங்கை வெளியேறும் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.

Related Stories: