×

விளைச்சல் 60 சதவீதம் வரை குறைவு: அல்போன்சா மாம்பழம் விலை கிடுகிடு உயர்வு: வழக்கமான சீசனை விட வரத்து தாமதம்

புதுடெல்லி: அல்போன்சா மாம்பழம் விளைச்சல் வடமாநிலங்களில் பாதியாக குறைந்து விட்டது. மேலும், வழக்கத்தை விட இந்த ஆண்டு மாம்பழ சீசன் தாமதம் ஆகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மாம்பழ சீசன் வழக்கமாக தமிழகத்தில் மார்ச் இறுதி அல்லது ஏப்ரலில்தான் தொடங்கும். ஆனாலும், மிக பிரபலமான அல்போன்சா மாம்பழங்கள் வடமாநிலங்களில் சில பகுதிகளில் பிப்ரவரி முதல் வாரத்திலேயே தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு வடமாநிலங்களில் மிகவும் தாமதமாகத்தான் மாம்பழங்கள் வரத்து தொடங்கியுள்ளது. அல்போன்சா மாம்பழங்கள் தமிழகத்தில் சில இடங்களில் விளைவிக்கப்படுகின்றன. வடமாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் கொங்கன் பகுதியில் அல்போன்சா அதிகமாக பயிரிடப்படுகிறது. இருப்பினும், இந்த சீசனில் கொங்கன் அல்போன்சா மாம்பழங்கள் இந்த மாத துவக்கத்தில் மும்பையில் சந்தைக்கு வந்தது.   விலை ஆண்டை விட 2 மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.  இதுகுறித்து மும்பை ஏபிஎம்சி மொத்த வியாபாரிகள் சங்க இயக்குநர் சஞ்சய் பன்சாரே கூறியதாவது: மாம்பழ விளைச்சல் மிகவும் குறைந்து விட்டது. இதனால் தற்போது 5 டஜன் கொண்ட ஒரு பெட்டி 6,000 முதல் 9,000 வரை உள்ளது. இது கடந்த ஆண்டு 3,000 முதல் 6,000 வரை விற்கப்பட்டது. மாம்பழத்தின் தரத்துக்கு ஏற்ப விலை மாறுபடும்.

சில்லறை விலை சந்தையில் விலை இன்னும் அதிகம். மொத்த விலை சந்தையில் 5 டஜன் கொண்ட பெட்டிகளாக மட்டுமே விற்பனை செய்யப்படும். கடந்த ஆண்டு இந்த சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 30,000 பெட்டிகள் வந்தன. தற்போது 2 நாளுக்கு ஒருமுறை 5,000 பெட்டிகள் மட்டுமே வருகின்றன என்றார். மும்பை சந்தையில் வரத்து மிக குறைவாக இருந்ததால், இந்த மாத துவக்கத்தில் ஒரு டஜன் 3,000 க்கு விலை போனது. தற்போது 2,500க்கு வி்ற்கப்படுகிறது. மும்பை மாநிலம் கொங்கன் பகுதியில் விளைவிக்கப்படும் மாம்பழம் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இங்கு கடந்த ஆண்டு 3,000 மி.மீ மழை பெய்தது. இந்த ஆண்டு 5,000 மி.மீ. பெய்துள்ளது. அதோடு, மழை கடந்த ஆண்டு நவம்பர் வரை நீடித்தது. மேலும், குளிர்காலத்தில் நிலவிய மோசமான சீதோஷ்ண நிலையால் மாமரங்கள் போதுமான அளவு பூ பூக்கவில்லை. பல உதிர்ந்து விட்டன. இதனால் விளைச்சல் 50 முதல் 60 சதவீதம் குறையும். எனவே, ஏப்ரல் இறுதி அல்லது மே மாத துவக்கத்தில்தான் சந்தைகளுக்கு அல்போன்சா மாம்பழ வரத்து அதிகம் இருக்கும். இருப்பினும் விளைச்சல் குறைந்ததால் கடந்த சீசனை விட விலை மிக அதிகமாகவே இருக்கும் என கொங்கன் பகுதி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

* மும்பை சந்தையில் சில இடங்களில் அல்போன்சா மாம்பழங்கள் சில்லறை விலையில் ஒரு டஜன் 2,500 முதல் 3,000 வரை விற்கப்படுகிறது.
* மோசமான சீதோஷ்ண நிலை மற்றும் அதிக மழை காரணமாக மாமரங்கள் பூ பூப்பது பாதிக்கப்பட்டு, விளைச்சல் கடந்த ஆண்டை விட 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை சரிந்துள்ளது.
* சந்தைக்கு ஏப்ரல் இறுதி அல்லது மார்ச் மாதத்தில்தான் அதிக மாம்பழங்கள் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Alphonsa ,delays ,season , Yield, Alphonsa mangoes, price hikes
× RELATED அல்போன்சா கல்லூரியில் தென்தமிழக அளவிலான கைப்பந்து போட்டி