பைப் காஸ் விநியோக ஒப்பந்த விவகாரம்: அதானி நிறுவனத்தின் அப்பீல் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

புதுடெல்லி: தமிழகம், புதுச்சேரியில் பைப் காஸ் விநியோக அனுமதிக்கு எதிரான, அதானி காஸ் நிறுவனத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. புதுச்சேரியில் பைப் காஸ் விநியோக ஒப்பந்தத்தை ஏஜி அண்டு பி எல்என்ஜி நிறுவனத்துக்கும், சென்னை மற்றும் திருவள்ளுரூக்கான ஒப்பந்தத்தை டாரன்ட் காஸ் நிறுவனத்துக்கும், காஞ்சிபுரத்துக்கான ஒப்பந்தத்தை எஸ்கேஎன் நிறுவனத்துக்கும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் (பிஎன்ஜிஆர்பி) கடந்த 2018ம் ஆண்டு வழங்கியது. இந்த ஒப்பந்தம் தங்கள் நிறுவனத்துக்கு வழங்கப்படாததை எதிர்த்து அதானி காஸ் நிறுவனம் தீர்ப்பாயத்தில் (ஏபிடிஇஎல்) மனு செய்தது. அதில், இந்த ஒப்பந்தங்கள் பிற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது நியாயமற்றது. ஒப்பந்த முடிவு பிஎன்ஜிஆர்பி வெப்சைட்டில் ஏற்றப்படவில்லை. எங்கள் நிறுவனத்துக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறியிருந்தது.

இந்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு இரு மாறுபட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதானி காஸ் நிறுவனத்தின் அப்பீல் மனுவை தீர்ப்பாயத்தின் தலைவர் ஏற்றார். இந்த மனுவை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொழில்நுட்ப உறுப்பினர் நிராகரித்தார். இதனால் இந்த மனு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அவர், இந்த விசாரணையில் இருந்து விலகி கொண்டதால், இந்த அப்பீல் மனு உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. அதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரா சூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘பிஎன்ஜிஆர்பி வாரியத்தின் வரன்முறைகளில், ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்கள் அதிக மதிப்பெண் பெற்றதால், அவர்களுக்கு சாதகமாக பிஎன்ஜிஆர்பி முடிவு செய்தது. இந்த வரன்முறையை பூர்த்தி செய்யாவிட்டால், ஏலம் கேட்கும் மற்ற நிறுவனங்கள் தானாக தகுதியிழக்கும். இதை தவறு என்றும், இயற்கை நீதி மற்றும் விதிமுறைகளுக்கு எதிரானது எனவும் கூற முடியாது’’ என்று உத்தரவிட்டனர்.

Related Stories: