எஸ்.ஆர்.எம். கல்லூரி விடுதியில் பஞ்சாப் மாணவி தூக்கிட்டு தற்கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு பிறகும் தொடரும் மர்மம்

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி விடுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மாணவி திடீரென மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்து கிடந்தார். கல்லூரியில் தொடர் தற்கொலை சம்பவம்  நிகழ்வதால், மாணவர்களிடையே பாதுகாப்பு குறித்து பீதி நிலவுகிறது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் அனில்குமார். இவரது மகள் ஆயிஷா ராணா (19). இவர், காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து, 2ம் ஆண்டு பி.டெக் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம்  நள்ளிரவு ஒரு மணியளவில் ஆயிஷா ராணா தூக்கில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வார்டன் கொடுத்த தகவலின்பேரில், மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்தனர். அங்கு ஆயிஷா ராணாவின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மற்றும் விடுதியில் மாணவிக்கு ஈவ்டீசிங் பிரச்னை அல்லது விடுதியில் வார்டனின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இக்கல்லூரியில் கடந்த 6 மாதங்களாக விடுதியில் தங்கியிருந்த 4 மாணவ, மாணவிகள் மேல்மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து டிஜிபி உத்தரவின்பேரில் விடுதிக்குள் மாணவ, மாணவிகளின் தொடர்  இறப்பு குறித்து சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மேலும் ஒரு மாணவி விடுதிக்குள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன் இக்கல்லூரி வளாகத்தில் துப்பாக்கி மற்றும் பட்டாக்கத்தியுடன் இரு தரப்பு மாணவர்கள் மோதிக் கொண்டனர். இதுதொடர்பாக ஒருசிலரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இதனிடையே கல்லூரியில் இதுபோன்ற சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. இதனால் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு குறித்து பீதி ஏற்பட்டுள்ளது.

Related Stories: