2 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் இன்று வருகை டிரம்புக்கு பிரமாண்ட வரவேற்பு

* விழாக்கோலம் பூண்டது அகமதாபாத்

* பாதுகாப்புக்கு 25 ஆயிரம் போலீஸ் குவிப்பு

அகமதாபாத்: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, இந்தியாவுக்கு முதல் முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று சுற்றுப் பயணம் வருகிறார். அவருக்கு அகமதாபாத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அவருடைய வருகையால் இந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்புக்கு 25 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்க அதிபராக கடந்த 2017ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் இந்தியாவுக்கு வந்தது கிடையாது. அவருடைய மகள் இவாங்கா மட்டும், தொழில் முறை பயணமாக இந்தியா வந்து  சென்றுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவில் கடந்தாண்டு 50 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்ற ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், டிரம்ப்பும் கலந்து கொண்டனர். அப்போது, இந்தியாவுக்கு பயணம் வரும்படி டிரம்புக்கு மோடி  அழைப்பு விடுத்தார். அதை டிரம்ப் ஏற்றார்.அதன்படி, முதல் முறையாக இந்தியாவுக்கு இன்று டிரம்ப் 2 நாள் சுற்றுப் பயணமாக வருகிறார். அவருடன் மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜேர்டு குஷ்னர் மற்றும் அமெரிக்க உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட பிரதிநிதிகள்  குழுவும் வருகிறது. இந்த பயணத்தின்போது இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ரீதியாக பிரமாண்ட ஒப்பந்தம் ஏற்படும் என்று கூறப்பட்டு வந்த தகவலை, சில தினங்களுக்கு முன் டிரம்ப் திடீரென மறுத்தார். மேலும், அமெரிக்க  பொருட்களுக்கு இந்தியா கடுமையான வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார். இதனால், சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், இரு தினங்களுக்கு முன் வாஷிங்டனில் பேட்டியளித்த அவர், ‘இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும்,’ என  தெரிவித்தார். இதனால், டிரம்ப்பின் இந்திய பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே திட்டமிட்டப்படி இன்று நண்பகல் 11.30க்கு ‘ஏர்போர்ஸ் ஒன்’ விமானம் மூலம், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் சர்வதேச விமான நிலையத்தில் டிரம்ப் வந்து இறங்குகிறார். அங்கு  அவருக்கு இந்திய கலாசார நடனங்கள், மேளதாளங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவரை பிரதமர் மோடி நேரடியாக சென்றுவரவேற்கிறார். பின்னர், இருவரும் சாலை மார்க்கமாக 22 கிமீ தூரம் பேரணி செல்கின்றனர். அப்போது, சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு, வரவேற்பு அளிக்கின்றனர்.  மேலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. வழியில் அவர்கள் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் காரில் புறப்பட்டு, மோடேரா செல்கின்றனர். அங்கு, ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். பிறகு அங்கிருந்து, ஆக்ராவுக்கு தனது குடும்பத்துடன் சென்று  தாஜ்மகாலை டிரம்ப் பார்த்து ரசிக்க உள்ளார். பிறகு, டெல்லி புறப்பட்டு செல்கிறார்.  டிரம்ப்பை வரவேற்க அகமதாபாத் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வண்ணத் தோரணங்கள், விளக்குகள், பிரமாண்ட வரவேற்பு பேனர்கள் என அமர்களப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.  அகமதாபாத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அமெரிக்க உளவு, புலனாய்வுத் துறை அதிகாரிகளும் பாதுகாப்பை மேற்பார்வையிட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் ரோந்தும் நடக்கிறது. நூற்றுக்கும்   மேற்பட்ட சிசிடிவி  கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

டெல்லியில் டிரம்ப் தங்கும் ஐடிசி மவுரியா நட்சத்திர ஓட்டல் பகுதி முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு வளைத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கு, என்எஸ்ஜியின்  டிரோன் தடுப்பு படை, குறிபார்த்து சுடும் வீரர்கள், சிறப்பு கமாண்டோ  படை,  மறைந்திருந்து சுடும் வீரர்கள் பிரிவு, மோப்ப நாய் பிரிவு மற்றும் தீவிரவாத  தாக்குதலை முறியடிக்கும் போலீசாரின் வாகனம் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளன. அதிபர் டிரம்ப்  பயண வழி, அதிபர் தங்கியிருக்கும் ஐடிசி மவுரியா ஓட்டலை சுற்றி பலத்த கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.

நாளை டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் டிரம்ப்புக்கு, ஜனாதிபதி சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. முன்னதாக, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று டிரம்ப் அஞ்சலி செலுத்துகிறார். பிறகு, ஐதராபாத்  இல்லத்தில் பிரதமர் மோடியும், டிரம்ப்பும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில், ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு, டிரம்ப் அமெரிக்கா புறப்படுகிறார்.

டிரம்பை வரவேற்க இந்தியா காத்திருக்கிறது

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி வெளியிட்டுள்ள டிவிட்டரில், ‘குஜராத் முழுவதும் ஒரே குரலில் பேசுகிறது அதுதான் ‘நமஸ்தே டிரம்ப்’ என பதிவிட்டு இருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில்,  ‘அமெரிக்க அதிபர் டிரம்பை  வரவேற்பதற்காக இந்தியா காத்திருக்கிறது. நாளை (இன்று) அவர் நம்முடன்  இருப்பது ெபருமிதம் தரக்கூடிய ஒன்றாகும். அகமதாபத்தில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை தொடங்குவோம்,’ என பதிவிட்டுள்ளார்.

8 மணிக்கு கிளம்பினார்

இந்திய பயணத்துக்காக நேற்று இரவு 8 மணி அளவில், வாஷிங்டனில் இருந்து அதிபரின் பிரத்யேக ‘ஏர்போர்ஸ் ஒன்’ விமானத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் அகமதாபாத் கிளம்பினர். முன்னதாக அவர் அளித்த  பேட்டியில், ‘‘பிரதமர் மோடி எனது நண்பர். இந்திய மக்களை சந்திப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்’’ என்றார்.

எச்1பி விசா குறித்து பேசுவீர்களா?

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘அமெரிக்காவிற்கு மட்டுமே முன்னுரிமை என டிரம்ப் பேசிவரும்போது இந்தியாவிற்கு முன்னுரிமை குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?  இந்தியாவிற்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைப்பதை மோடி உறுதி செய்ய வேண்டும். எச்1பி விசா மற்றும் இந்தியாவுக்கு மீண்டும் நெருங்கிய நட்பு நாடு அந்தஸ்து வழங்குவது குறித்து  டிரம்பிடம் மோடி பேசுவாரா?’ என்று  கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகுபலி டிரம்ப்

இந்திய பயணம் குறித்து அதிபர் டிரம்ப்  நேற்று டிவிட்டரில், ‘,இந்தியாவில் உள்ள  எனது சிறந்த நண்பர்களுடன் நேரம் செலவழிப்பதை எதிர்பார்த்து  காத்திருக்கிறேன்,’ என பதிவிட்டுள்ளார்.  மேலும், இதனுடன் தன்னை  பாகுபலியாக  சித்தரித்து வெளியிட்டப்பட்ட 87 வினாடி ஓடும் மார்பிங்  செய்யப்பட்ட வீடியோவையும் மறுபதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் ரதம்  ஒன்றில் மனைவி மெலானியாவுடன் டிரம்ப் வருகிறார். பின்னர் வீரர்கள்  படை சூழ மகன் ஜூனியர்  டொனால்ட்  மற்றும் மகள் இவாங்காவுடன் டிரம்ப்  குதிரையில் சீறி வருகிறார். பின்னர் கிராமம் போன்ற பின்னணி உடைய  இடத்தில் பிரதமர் மோடி அவரை வரவேற்கிறார். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள்  திரண்டு டிரம்பை  வரவேற்கின்றனர். பின்னர், யானையின் மீது வரும்  டிரம்ப், ராவணன் உருவ பொம்மைக்கு தீ வைக்கிறார். இதில் மிகப்பெரிய அளவில்  ஆங்கில எழுத்தான’ டி’ எழுதப்பட்டுள்ளது. இது அமெரிக்க எதிர்கட்சியான ஜனநாயக கட்சியை  குறிப்பிடுவதாக உள்ளது. முன்னதாக பிரதமர் மோடி, அம்பு ஒன்றை  அதிபரின் மனைவி மெலனியாவிடம் தருகிறார். அவர் அதனை டிரம்பிடம் தருகிறார்.  அந்த அம்பின் மூலமாக ராவணன் உருவ பொம்மைக்கு அவர் தீ வைக்கிறார்.   வீடியோவின் முடிவில் இந்தியா-அமெரிக்கா இணைகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தாஜ்மகால் செல்லும் டிரம்ப்

அதிபர் டிரம்ப், மனைவி மெலனியா, மகள் இவாங்கா மற்றும் பிரதிநிதிகள் குழுவினருடன் இன்று மாலை தாஜ்மகால் செல்கிறார். அங்கு ஒரு மணி நேரத்தை அவர் கழிக்கிறார். பிறகு, அங்கிருந்து அவர் டெல்லி செல்கிறார். முன்னதாக,  கேரியா விமான நிலையம் வரும் அதிபரை நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் மயில் நடனமாடி வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உணவில் ‘காமன்’

சபர்மதி ஆசிரமத்துக்கு வரும் டிரம்ப் குடும்பத்துக்கு இன்று பிரபல சமையல் கலைஞர் கன்னா உணவை தயாரிக்க உள்ளார். அவர் கூறுகையில், ‘‘அதிபர் குடும்பத்துக்கு குஜராத்தின் பிரபல உணவான ஆவியில் வேகவைக்கப்படும் காமன்  (கடலைப்பருப்பில் தயாரிக்கப்படும்), பிராகோலி, சோளத்தால் ஆன சமோசா, காஜூ கட்லி, பல்வேறு வகை டீ தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்

ளது’’ என்றார்.

36 மணி நேரத்துக்கு 120 கோடி செலவா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவில் வெறும் 36 மணி நேரமே இருக்கிறார். ஆனால், அவரை வரவேற்பதற்காகவும், அவருடைய நிகழ்ச்சிக்காகவும் மத்திய அரசு தரப்பில் ரூ.120 கோடி வரை செலவழிக்கப்படுவதாக காங்கிரஸ்  குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘மக்களின் வரிப்பணம் இப்படி வீணடிப்பதால், இந்தியாவுக்கு ஏதாவது லாபம் கிடைக்கப்போகிறதா?’’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

விவிஐபி நுழைவாயில் இடிந்தது

டிரம்ப்பை வரவேற்பதற்காக அகமதாபாத்தில் உள்ள மோடேரா கிரிக்ெகட் ஸ்டேடியத்தில் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த ஸ்டேடியத்தில் அமைக்கப்பட்டு இருந்த 2 விவிஐபி நுழைவு வாயில்கள் நேற்று  அடுத்தடுத்து இடிந்து விழுந்தன. இந்த வாயில்களில் இரும்பு கம்பிகள் வெல்டிங் செய்யப்பட்டு, மோடி - டிரம்ப் வரவேற்பு  பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலை இங்கு பலத்த காற்று வீசியதால், இந்த நுழைவு வாயில்கள் இடிந்து  விழுந்தன. இதில், யாரும் காயம் அடையவில்லை. இவற்றை சரி செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

டிரம்ப் தங்கும் ‘சாணக்கியா’

டெல்லியில் உள்ள ‘ஐடிசி மவுரியா’ ஓட்டலில் டிரம்ப் தங்குகிறார். ‘சாணக்கியா’ பெயர் கொண்ட 2 படுக்கை வசதி கொண்ட பிரமாண்ட அறையில் டிரம்ப் தங்க உள்ளார். இதில், தனியார் ஸ்பா, உணவு பரிசோதனை கூடம் மற்றும் சுத்தமான  காற்றை விருந்தினர்கள் சுவாசிப்பதை உறுதி செய்யும் வகையில் காற்று தர கண்காணிப்பு அமைப்பு போன்றவை இடம் பெற்றுள்ளது. வரவேற்பறை, 12 பேர் அமர்ந்து சாப்பிடும் டைனிங் வசதி, ஜிம்மும் இடம் பெற்றுள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ஜிம்மி கார்டர், பில் கிளிண்டன், ஜார்ஜ் வி புஷ்ல பராக் ஒபாமா ஆகியோர் இந்த ‘சாணக்கியா’ அறையில்தான் தங்கினார்கள். கடந்த 2015ம் ஆண்டு ஒபாமா இதில் தங்கியபோது, ஜனவரி 26ம் தேதி ஓட்டலின்  மேல் தளத்தில் உள்ள ஐரோப்பிய உணவகத்தில் இருந்து உணவு வரவழைத்து இந்திய, அமெரிக்க சிஇஓ.க்களுடன் சாப்பிட்டார்.

Related Stories: