×

மத்தியபிரதேசத்தில் வீடு தேடி வரும் சரக்கு; காங்கிரஸ் அரசு மாநிலத்தை இத்தாலியாக மாற்ற விரும்புகிறது...பாஜக விமர்சனம்

போபால்: மத்தியபிரதேச மாநில அரசு வெளிநாட்டு மதுபான வகைகளை ஆன்லைன் முறையில் வீடு தேடிச் சென்று வழங்கும் திட்டத்தை கொண்டு  வந்துள்ளது. மாநில அரசின் இந்த முடிவுக்கு அம்மாநில பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2020-21ம் ஆண்டுக்கான மத்தியப்பிரதேச அரசின் புதிய கலால்  கொள்கையின் கீழ், ஆன்லைனில் மதுபானம் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. கலால் முறையில் வருவாயை அதிகரிப்பதற்காக, 2,544 உள்நாட்டு  மதுபானங்கள் விற்கும் கடைகள் மற்றும் 1,061 வெளிநாட்டு மதுபானங்கள் விற்கும் கடைகளுடன் முந்தைய ஆண்டின் மதிப்பில் 25 சதவீதம் அதிகரித்து  செயல்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி, வெளிநாட்டு மதுபானம் ஆன்லைன் முறையில் வீடு தேடிச் சென்று விநியோகிக்கப்படும். மதுபான வியாபாரத்தின் மீது கட்டுப்பாட்டைக்  கொண்டுவருவதற்காக, ஒவ்வொரு மது பாட்டிலிலும் நிறுவப்பட்ட ‘பார்’ குறியீடு அமைத்து கண்காணிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். புதிய  மதுக்கடைகளை அமைக்க இ-டெண்டர் முறையில் ஏலம் விடப்படும். இந்தூர், போபால், குவாலியர் மற்றும் ஜபல்பூர் ஆகிய நகரங்களில் உள்நாட்டு மற்றும்  வெளிநாட்டு மதுவகைகளுக்கென இரண்டு குழுக்களாக மது விற்பனைக் கடைகள் அமைக்கப்படும்.

மேலும், திராட்சை உற்பத்தி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், திராட்சை சாகுபடியை ஊக்குவிப்பதற்கும், திராட்சைகளில் இருந்து  தயாரிக்கப்படும் ‘ஒயின்’ மதுவை ஊக்குவிப்பதற்காக சுற்றுலா இடங்களில் 15 புதிய விற்பனை நிலையங்கள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசின்  சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கலால் கொள்கை தொடர்பாக இந்தூர் பாஜக எம்எல்ஏ ரமேஷ் மெண்டோலா டுவிட்டர் பதிவில், ‘வீட்டுக்கே சென்று மதுபானம் சப்ளை செய்வதை  பார்த்தால், ஆளும் காங்கிரஸ் அரசு மாநிலத்தை இத்தாலியாக மாற்ற விரும்புகிறது. உலகிலேயே மூன்று பெரிய மது உற்பத்தியாளர்களில் இத்தாலி  ஒன்றாகும். மாநில முதல்வர் கமல்நாத்தின் இந்த உத்தரவை, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வரவேற்கின்றனரா?’ என்று பதிவிட்டுள்ளார்.

Tags : government ,Madhya Pradesh ,Congress ,state ,Italy ,BJP , Home-searching inventory in Madhya Pradesh; The Congress government wants to convert the state into Italy ... BJP criticism
× RELATED 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால்...