மக்களுக்காக அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை; பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் நாடகச்செயல்...மு.க.ஸ்டாலின் பேச்சு

மதுரை: முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது ஆதரவாளர்கள் மற்றும் மாற்றுக்கட்சியினருடன் திமுகவில் இணையும் மாபெரும் விழா மதுரை  ஒத்தக்கடையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதற்காக, இன்று மதுரை வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக  வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது ஆதரவாளர்கள் 1000  பேருடன் திமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக தங்களை இணைத்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பேசுவதற்கு அதிமுக அரசுக்கு தகுதி இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 6,330 பேர் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதானவர்கள் சில நாட்களில் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். மக்கள் வரிப்பணத்தை எடுத்து அரசு விளம்பரமாக தருகிறது அதிமுக அரசு என்றார்.

அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்தங்கியே இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். 110 விதியை பயன்படுத்தி அதிமுக அரசு அறிவித்தவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தமிழக அரசு கொண்டு வந்துள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் நாடகச்செயல் என்றும் தெரிவித்தார். வேளாண் மண்டத்தில் திருச்சி, அரியலூரை ஏன் சேர்க்கவில்லை என என்றும் கேள்வி எழுப்பினார். டெல்டா பகுதிகளில் ஏற்கனவே உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தடுக்க வேளாண் மண்டல சட்டத்தில் எதும் இல்லை.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நடைபெறவில்லை. மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 13 மாதங்கள் கடந்த பிறகும் கட்டுமானப்பணிகளில் முன்னேற்றம் இல்லை. தமிழக பொருளாதார வளர்ச்சி 8.17 சதவீதத்திலிருந்து 7.27 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மக்களுக்காக அதிமுக அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை. தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து வருவதுதான் அதிமுக அரசின் சாதனை என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: