அவிநாசி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி: தடுப்புச்சுவரை உயர்த்த சமூக ஆர்வலர்கள் கருத்து

அவிநாசி: அவிநாசி அருகே கேரள அரசு பேருந்து மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களுக்கு, பொதுமக்கள் நேற்று இரவு அவிநாசி புதிய பஸ் நிலையம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி மலரஞ்சலி  செலுத்தினர். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து 48  பயணிகளுடன் கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி சென்ற கேரள அரசு பேருந்து மீது எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோதியது.  இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த  19 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர்  காயமடைந்தனர். இந்த கோர விபத்து,  பொதுமக்களை பெரும் சோகத்தில்  ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், இந்த  விபத்தால் உயிழந்தவர்களுக்கு  மெழுகுவர்த்தி ஏந்தி, மலரஞ்சலி செலுத்தும்  நிகழ்ச்சி அவிநாசி புதிய  பேருந்து நிலையம் முன்பு நேற்று இரவு நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில்,  ஆம்புலன்ஸ் வாகன டிரைவர்கள், சமூக ஆர்வலர்கள்,  பொதுமக்கள்,  பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்று  மலரஞ்சலி  செலுத்தி ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தனர்.

இது தொடர்பாக  சமூக  ஆர்வலர்கள் கூறுகையில்: இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகின்றன. 6 வழிச்சாலையில் மத்தியில் உள்ள மைய தடுப்புச்சுவர் உயரம் அரை அடிக்கும் குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் பைபாஸ் ரோட்டில் அனைத்து பகுதியிலும் உயரம் குறைவாக உள்ளது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மைய தடுப்புச்சுவர் 3 அடி முதல் மூன்றரை அடி உயரம் வரை உள்ளது. எனவே மையத்தடுப்புச்சுவரை உயரமாக அமைத்தால்,   விபத்துக்களையும், பெருமளவில் ஏற்படும் உயிர்சேதத்தையும் தடுக்கலாம் என்றனர். மேலும், மையப்பகுதியில் வளர்த்து வருகின்ற செடிகளுக்கு பதிலாக உறுதியான மரங்களாக இருந்திருந்தால், விபத்தும், அதிகளவு உயிர்சேதமும்   ஏற்படாமல் குறைந்திருக்கும். என்றனர்.

Related Stories: