மாசி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடல்

ராமேஸ்வரம்: மாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி, அம்பாள் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்கி காட்சியளித்தனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவின் பத்தாம் நாளான இன்று அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு ஸ்படிலிங்க தரிசனம் நடந்தது. சுவாமி சன்னதியில் காலபூஜைக்கு பின் காலை 9 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மதியம் ஒரு மணிக்கு மேல் சவாமி அம்பாள் தங்கரிஷப வாகனங்களில் அக்னிதீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கினர்.

அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை துவங்கி அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய ஏராளமான பக்தர்கள் ரதவீதியில் வரிசையில் நின்று கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்களிலும் நீராடி சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். மதியம் 1.30 மணிக்கு சுவாமி அம்பாள் அக்னிதீர்த்த கடற்கரைக்கு புறப்பாடானதும் கோயில் நடை அடைக்கப்பட்டது. பக்தர்கள் கோயிலுக்குள் தீர்த்தமாடவும் மதியத்திற்கு மேல் அனுமதிக்கப்படவில்லை. இதனால் மதியத்திற்கு மேல் அக்னிதீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள் தீர்த்தக்கரை மண்டகப்படியில் சுவாமி, அம்பாளை தரிசித்து சென்றனர். இன்று மாலை 6 மணிக்கு அக்னிதீர்த்த கரையில் சிறப்பு தீபாராதனை முடிந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா வந்து இரவு 8 மணிக்கு மேல் கோயிலை வந்தடைந்ததும் மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி சன்னதியில் அர்த்தஜாம பூஜை, பள்ளியறை பூஜையும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் கல்யாணி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: