×

கேரளாவில் பெரும் பரபரப்பு: சாலையோரம் குவியல் குவியலாக பாகிஸ்தானின் துப்பாக்கி தோட்டாக்கள்

திருவனந்தபுரம்: கேரளாவில் தமிழக எல்லையை ஒட்டி சாலையோரத்தில், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள போலீசில் சமீபத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 25 அதிநவீன துப்பாக்கிகள் மாயமானதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கேரள குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு ஏடிஜிபி டோமின் தச்சங்கரி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றப்பிரிவு போலீசார் திருவனந்தபுரம் ஆயுதப்படை முகாமில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி குண்டுகளின் கணக்குகளை சரிபார்த்தனர். இந்த நிலையில் நேற்று கொல்லம் மாவட்டத்தில் உள்ள திருவனந்தபுரம் - தென்மலை நெடுஞ்சாலையில் குளத்துப்புழா வனப்பகுதியில் 30 அடி பாலம் அருகே சாலையோரம் நாளிதழில் பொதியப்பட்ட நிலையில் ஒரு பார்சல் காணப்பட்டது. இந்த சாலை தென்காசி - கொல்லம் நெடுஞ்சாலையாகும். தமிழக எல்லையில் இருந்து 20 கி.மீ தூர பகுதி. சாலையோரம் பார்சல் கிடப்பதை அவ்வழியாக சென்று கொண்டிருந்த குளத்துப்புழாவை சேர்ந்த ஜோஷி மற்றும் திருவனந்தபுரத்தை சேர்ந்த அவரது நண்பர் அஜீஷ் ஆகியோர் பார்த்தனர். சந்தேகம் அடைந்த அவர்கள் குச்சியால் அதை திறந்து பார்த்தனர். அப்போது அதில் பிளாஸ்டிக் கவரில் பொதியப்பட்ட நிலையில் துப்பாக்கி குண்டுகள் காணப்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் குளத்துப்புழா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார், தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள், வெடிகுண்டு பிரிவு போலீசார் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் 14 துப்பாக்கி குண்டுகள் இருந்தது தெரியவந்தது. அதில் 12 குண்டுகளில் ‘பிஓஎப்’ (பாகிஸ்தான் ஆர்டினன்ஸ் பேக்டரி) எனவும், 1980-1982ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 2 குண்டுகளில் தயாரிக்கப்பட்ட விபரம் இல்லை. அந்த பார்சலில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 12 குண்டுகளும் சாதாரணமாக வைக்கப்படும் பவுச்சிலும், 2 குண்டுகள் தனியாகவும் இருந்தன. இந்த குண்டுகள் ராணுவம் மற்றும் போலீசார் பயன்படுத்துபவை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவை நீண்ட தொலைவு சுட பயன்படுத்தும் 7.62 மி.மீ குண்டுகளாகும். குண்டுகளை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். இதுகுறித்து கேரள டிஜிபி லோக்நாத் பெக்ரா கூறுகையில், குளத்துப்புழாவில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டுகள் வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்தவை என தெரிகிறது. இது தொடர்பாக தீவிரவாத தடுப்புப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டிஐஜி அனூப் குருவிலா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார். இந்தியாவில் தயாரிக்கப்படும் துப்பாக்கி குண்டுகள் ‘ஐஓஎப்’ என  குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த குண்டுகளைத்தான் இந்திய ராணுவமும்,  போலீசும் பயன்படுத்தி வருகின்றன. வழக்கமாக தயாரிப்பு விபரங்கள் இல்லாத  துப்பாக்கி குண்டுகளை தயாரிப்பது சட்டப்படி குற்றமாகும்.
 
தமிழகத்தில் இருந்து வந்தவையா?

சாலையோரம் வீசப்பட்டிருந்த 14 துப்பாக்கி குண்டுகளும் பிளாஸ்டிக் கவரில் பொதிந்து அதன் மீது 2 நாளிதழ்கள் சுற்றப்பட்டிருந்தன. அதில் ஒன்று தமிழ், மற்றொன்று மலையாள நாளிதழ் ஆகும். மேலும் இவை ஜனவரி 28ம் தேதி வெளியான நாளிதழ்களாகும். எனவே இந்த தேதிக்கு பின்னர்தான் இந்த துப்பாக்கி குண்டுகள் சாலையோரம் வீசப்பட்டிருக்க வேண்டும். தமிழ் நாளிதழில் சுற்றப்பட்டிருந்ததால், தமிழகத்தில் இருந்து யாராவது இதை கொண்டு வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவ உளவுத்துறையும் விசாரிக்க உள்ளது.

கண்ணூரில் 60 தோட்டாக்கள் பறிமுதல்

கண்ணூர் இரிட்டி பகுதி கர்நாடகா மற்றும் கேரளாவை இணைக்கும் முக்கிய இடமாக உள்ளது. கோழிக்கோடு, கண்ணூர் உட்பட கேரளாவின் வட மாவட்டங்களில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு இந்த பாதை வழியாக செல்லலாம். கர்நாடகாவில் இருந்து கஞ்சா மற்றும் போதைப்பொருள் இப்பகுதி வழியாகத்தான் பெரும்பாலும் கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கலால்துறை அதிகாரிகள் இங்கு அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை கண்ணூர் இரிட்டி பகுதியில் கலால்துறை அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரின் டிக்கியில் ஒரு பார்சல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து பார்த்தபோது அதில் நாட்டு துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 60 ேதாட்டாக்கள் இருந்தன.
 
இதையடுத்து காரில் இருந்த கண்ணூர் தில்லங்கேரி பகுதியை சேர்ந்த பிரமோத்(42) என்பவரை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அப்ேபாது அவர் கர்நாடக மாநிலம் வீராஜ்பேட்டையில் இருந்து தோட்டாக்களை வாங்கி வந்ததாகவும், வயல்களை நாசம் செய்யும் பன்றிகள் மற்றும் குரங்குகளை விரட்ட இவற்றை வாங்கி வந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவரை இரிட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் ஒரேநாளில் இரு இடங்களில் துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Pakistan ,Kerala ,Gun Bullets , Kerala, Pakistan, Gun Bullets
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்