தமிழில் தான் பேசுவேன்; ஆனால் தமிழகத்திற்கு வரமாட்டேன்: கைலாச நாடு அமைக்கும் பணி நிறைவு....நித்தியானந்தா வீடியோ வெளியீடு

சென்னை: தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நித்தியானந்தா உலகமெங்கும் தன்னுடைய சீடர்களை கொண்டு இருப்பவர். பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு பரமஹம்ச நித்யானந்தா பீடம் நடத்தி வருகிறார். இங்கு ஏராளமான பெண்கள் பணிபுரிகின்றனர். பல்வேறு நாட்டிலிருந்தும் சீடர்ககள் தொடர்ந்து வருகை புரிந்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நித்யானந்தா மீது இருந்த பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தலைமறைவானார். ஆனால், யூடியூப்பில் மட்டும் பக்தர்களுக்கு சொற்பொழிவு ஆற்றி வருகிறார்.

இதற்கிடையே, நித்தியானந்தாவிற்கு, கைது வாரண்ட் பிறப்பித்த கர்நாடக நீதிமன்றம் உத்தரவையடுத்து, போலீசார் அவரை தேடி வருகின்றனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான வீடியோவில் பேசிய நித்தியானந்தா, ஒரு குட்டி நாட்டை அமைக்க உள்ளதாகவும், அந்த தீவிற்கு நித்யானந்தா கைலாசம் என்றும் பெயர் வைத்துள்ளதாக தெரிவித்தார். இந்து மதத்தை பின்பற்றும் எவரும் கைலாச நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்றும் வெளிப்படையாக நித்தியானந்தா தெரிவித்தார்.

மேலும், அந்த நாட்டில் 10 கோடி பேர் வரை வாழ்ந்து வருவதாகவும், அந்த நாட்டுக்கென தற்போது தனி பாஸ்போர்ட், மொழி, உள்ளிட்டவற்றையும் குறிப்பிட்டார். அதற்கு அடுத்தடுத்த வீடியோக்களில், கைலாசாவை அமைத்தே தீருவேன், இதுவரையில் கைலாசாவில் குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என பேசினார்.

இந்நிலையில், நித்தியானந்தா வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியதாவது, தேவையில்லாமல் எதிரிகள், எதிர்ப்புகள் என நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க நான் என்னுடைய செயலை செய்து கொண்டிருக்கிறேன். நான் உருவாக்கி கொண்டிருக்கும் கைலாசா, உலகிற்கே பெரும் பங்களிப்பாக இருக்கும். கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. இனி, எனக்கும் தமிழகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என் வாழ்நாள் முழுவதும் தமிழில் பேசுவேனே தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை என்று பேசியுள்ளார்.

நான் புலம் பெயர்ந்த தமிழன் என பெருமையாக சொல்வேன். அவர்கள் ஓடிப்போன நித்தி என சொல்வார்கள். தமிழக ஊடகத்தை பொறுத்தவரை நான் இறந்துவிட்ட மனிதனை போன்றவன். இனி நான் தமிழகத்திற்கு வரப்போவது இல்லை, உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்க போகிறேன். நான் இறந்தபிறகு கர்நாடக ஆசிரமத்தில் உள்ள தியான பீடத்தில் தான் என் உடல் அடக்கம் செய்ய வேண்டும் என எழுதி வைத்துவிட்டேன். சொத்து முழுவதும், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை ஊர்களில் உள்ள குரு பரம்பரைக்கு எழுதி வைத்து விட்டேன் என்று பேசியுள்ளார்.

Related Stories: