தேர்தலுக்கு மட்டுமே வலம் வரும் வாக்குறுதி; 78 ஆண்டுகளாக ரயிலுக்கு ஏங்கி நிற்கும் கிருஷ்ணகிரி: லாபம் இருக்காது என்று புறக்கணிப்பு

கிருஷ்ணகிரி: கர்நாடக எல்லைப்பகுதியாக இருப்பது தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம். கனிம வளம் நிறைந்த இந்த மாவட்டத்தில் கிடைக்கும் கிரானைட் கற்களுக்கு  ஜெர்மன், இத்தாலி உள்ளிட்ட உலக நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இம்மாவட்டத்தில் உற்பத்தியாகும் மாங்கூழ், ரோஜா மலர் செல்லாத வெளிநாடுகளே இல்லை. இவற்றை ஏற்றுமதி செய்ய பெரும்பாலும் சாலை போக்குவரத்தை மட்டுமே மாவட்ட மக்கள் நம்பியுள்ளனர். ஏனெனில், கிருஷ்ணகிரிக்கு ரயில் வசதி இல்லை. கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை மற்றும் வெளியூர்களுக்கு ரயிலில் செல்ல வேண்டும் என்றால் ஜோலார்பேட்டை அல்லது தர்மபுரிக்கு செல்ல வேண்டும். குறிப்பாக இம்மாவட்டத்தில் அதிக அளவில் ராணுவ வீரர்கள் உள்ளனர். இவர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்திற்கு செல்ல வேண்டுமானாலும், அங்கிருந்து மீண்டும் கிருஷ்ணகிரிக்கு வரவேண்டுமானாலும் ஜோலார்பேட்டைக்கு தான் செல்கின்றனர். பெரு நகரங்களை இணைக்கும் சாலை வசதி கொண்ட கிருஷ்ணகிரியில் ரயில் வசதி இல்லை என்பது எல்லை மாவட்ட மக்களின்  பெரும் குறையாக உள்ளது.

ஆங்கிலேயர்கள் காலத்தில் நாடு முழுவதும் ரயில்வே போக்குவரத்து தொடங்கப்பட்டது. அப்போது பெங்களுர்- சென்னை இடையே ரயில் பாதை அமைக்க 1832ம் ஆண்டு முதலில் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக 1836ம் ஆண்டு ‘சர்வே’ செய்யப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி இடம் பெற்றிருந்த போதிலும், 1840ம் ஆண்டு வரை இத்திட்டம் நிறைவேற்றப்பட வில்லை. பின்னர் 1842ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி பிரிட்டீஷ் பொறியாளர் சார்லஸ் பிளாக்கர் விக்னோல் என்பவரால் இத்திட்டத்திற்கான வரைபடத்தை கிழக்கு இந்திய ரயில்வே கம்பெனியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 1896ம் ஆண்டு ஜோலார்பேட்டை- திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி வரை ரயில் பாதை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. ஜோலார்பேட்டை -திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி வரை 38 கிலோமீட்டர் தூரம் ஆகும். இப்பாதையை அமைக்கும் போது பர்கூருக்கும் கிருஷ்ணகிரிக்கும் இடையில் காட்டிநாயனப்பள்ளி, வரட்டனப்பள்ளி பகுதிகள், வனங்கள் மிகுந்தவையாக இருந்தது. ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டுருந்த 16 ஊழியர்கள் வனவிலங்குகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பின்னர் 1905ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி பணி நிறைவடைந்தது.  

அப்போது திருப்பத்தூரில் தொடங்கி பர்கூர் வழியாக கிருஷ்ணகிரி வரை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இவ்வழித்தடம் 5 ரயில் நிலையங்களை கொண்டதாகும். 1905ம் ஆண்டு முதல் 1936ம் வரை பயணிகள் போக்குவரத்து  பயன்பாட்டில் இருந்துள்ளது.  அப்போது கிருஷ்ணகிரியை சேர்ந்த நாகராஜ் என்பவர் ஸ்டேஷன் மாஸ்டராக பணி புரிந்துள்ளார். ஆனால் போதிய வருமானம் இல்லாததால் இரண்டாம் உலக போர் நடந்த கால கட்டத்தில் 1942ம் ஆண்டு ரயில் பாதை வசதி துண்டிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை சுமார் 78 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மக்களுக்கு ரயில் வசதி என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. இதனிடையே கடந்த 1998ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரயில்வே துறை மூலம் அமைக்கப்பட்ட குழுவினர் ஜோலார்பேட்டை முதல் ஒசூர் வரை ‘சேட்டிலைட்’  ஆய்வு நடத்தி திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கினர். அப்போது இத்திட்டத்திற்கு ₹ 147 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்தின் மதிப்பீடு ₹ 2000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் லாபம் இருக்காது என்று அதிகாரிகள் புறக்கணிப்பதும் மக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த ரயில் பாதை ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர், கந்திலி, பர்கூர், கிருஷ்ணகிரி, சூளகிரி வழியாக ஓசூர் வரை 101 கிலோ மீட்டருக்குப் புதிதாக தண்டவாளம் அமைக்கப்பட வேண்டும். போக்குவரத்திற்கு மட்டுமின்றி பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும். ஏற்றுமதிக்கு ரயில் வசதி மிகவும் அவசியம் என்கின்றனர் மாவட்ட மக்கள்.  கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கனவான ரயில் பாதை திட்டம், மத்திய அரசின் ஏதாவது ஒரு பட்ஜெட்டில் வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை ஏமாற்றமே விஞ்சி நிற்கிறது. இதேபோல் ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலின் போதும், இங்கு பிரச்சாரத்திற்கு வரும் தலைவர்கள் கிருஷ்ணகிரிக்கு ரயில் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை தொடர்ந்து அளித்து வருகின்றனர். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் கிருஷ்ணகிரியை மறந்துவிடுகின்றனர். குறிப்பாக முந்தைய ஆட்சியின் போது பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடியும், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் இந்த வாக்குறுதியை அளித்து வாக்கு சேகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை இது வாக்குறுதியாக மட்டுமே இருப்பது வேதனைக்குரியது என்பது மக்களின் குமுறல்.

Related Stories: