×

நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு ஆல், அரசன், புளிய மரங்கள் பலி: ஆண்டுக்கு 2.5 லட்சம் மெட்ரிக் டன் புளி உற்பத்தி சரிந்து வருவாயும் இழப்பு

வேலூர்: ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்தே பிரதான பங்கு வகிக்கிறது. நீர்வழி, நிலவழி, வான்வழி போக்குவரத்து என்ற மூன்றில் நிலவழி போக்குவரத்தில் ரயில் போக்குவரத்தை தவிர சாலை போக்குவரத்து பிரதான பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.தமிழகத்தில் 2,274 கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலைகளிலும், 2,250 கி.மீ மாநில நெடுஞ்சாலைகளிலும், பல்லாயிரம் கி.மீ தூரம் ஊரக சாலைகளிலும் புளியமரங்கள், ஆல், அரசன், வேம்பு, இலுப்பை, நாவல், பனை, புங்கன் மரங்கள் நிறைந்துள்ளன. இதுபோக வனப்பகுதிகள், கிராமப்புறங்களிலும் தோப்புகளாகவும், தனித்த மரங்களாகவும் புளிய மரங்கள் நெடிதுயர்ந்து காணப்படுகின்றன. இவற்றில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில ெநடுஞ்சாலைகள், கிராமப்புற, நகர்ப்புற சாலைகள் என மொத்தம் 50 லட்சம் புளிய மரங்கள் இருந்தன. இதுபோக வனம், விவசாயம் மற்றும் பிற நிலங்களில் என மொத்தம் 20 லட்சம் மரங்கள் நிறைந்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை பனை மரத்துக்கு அடுத்த இடத்தை புளிய மரம் பெற்றிருந்தது. தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 6 லட்சம் புளிய மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓச்சேரி தொடங்கி கிருஷ்ணகிரி வரை 40 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டன.

இதில் 25 ஆயிரம் மரங்கள் புளிய மரங்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் விழுப்புரம்-மங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேட்டவலம் தொடங்கி கணியம்பாடி வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டிருக்கலாம் என்றும், இதில் 25 சதவீதம் புளிய மரங்கள் என்றும் கணக்கிடப்படுகிறது. அதேபோல் ஆற்காடு-திண்டிவனம் சாலை, காஞ்சிபுரம்-செய்யாறு சாலைகளிலும் விரிவாக்கப்பணியின் போது நூற்றுக்கணக்கான புளிய மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் மட்டும் 900 ஹெக்டர் பரப்பளவு தேசிய நெடுஞ்சாலைகளில் புளிய மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் சராசரியாக 2.5 லட்சம் மெட்ரிக் டன் புளி மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பிற சாலை பணிகளின் போது இழக்கப்பட்ட இழப்புகள் தனியானது. அதே போல் நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வருவாய் போனது. இதில் மிகத்துல்லியமான புள்ளி விவரம் என்பது கூற இயலாது. இந்த இழப்பில் மரம், பட்டை, இலை என புளிய மரம் தரும் ஏனைய பயன்கள் கணக்கில் தரப்படவில்லை என்கின்றனர் விவசாயத்துறை வல்லுனர்கள்.

அக்காலத்தில் சாலைகளின் இருபுறமும் ஆல், அரசன், வேம்பு, பனை, இலுப்பை, நாவல், புங்கன், புளிய மரங்கள் நடப்பட்டன. இவை அரசின் வருவாய்க்கு மட்டுமல்லாமல், நிழலுக்காகவும், வாகனங்களால் ஏற்படும் விபத்துகளில் ஏற்படும் இழப்பின் வீரியத்தை குறைக்கவும் பயன்பட்டன. அத்துடன், வாகனங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை தடுக்கவும் இந்த மரங்கள் பயன்பட்டன. இதற்காக சாலைகளில் அகற்றப்படும் ஒரு மரத்துக்கு ஈடாக 10 மரங்கள் நட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை கடந்த 2014ம் ஆண்டு உத்தரவிட்டது. எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மட்டும் இன்றி, இழந்துவிட்ட புளி மகசூலை திரும்ப பெறுவதற்காகவும், விபத்தின் வீரியத்தை குறைப்பதற்காகவும் மத்திய, மாநில நெடுஞ்சாலைத்துறைகள் மற்றும் கிராமப்புற சாலை விரிவாக்கப்பணிக்காக வெட்டி சாய்க்கப்பட்ட புளிய மரங்களுக்கு ஈடாக மலர் செடிகளையும், பிற மரங்களையும் வைப்பதைவிட புளிய மரக்கன்றுகளையே நட்டு பராமரிக்க முன்வர வேண்டும் என்று சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்துறை வல்லுனர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


பயன்தராத மென்மரங்கள்

நான்கு வழிச்சாலையில் அகற்றப்படும் 1 மரத்துக்கு 10 மரம் நட வேண்டும் என்று 2014ல் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 5.1 லட்சம் மரங்கள் நடப்பட வேண்டும். ஆனால், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான மரங்கள் கூட ஒன்றுக்கும் பயன்தராத மென்மரங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் 6 வழிச்சாலைக்காக வெட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்டது

வெப்ப மண்டல தாவரமான புளிய மரம் வழங்கும் புளியம்பழம் தெற்காசியாவில் அதிகமாக உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. ‘தாமரின்டஸ் இண்டிகா’ என்ற அறிவியல் பெயர் கொண்ட புளி ‘பபேசி யேசி’ தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. புளியில் கால்சியம், வைட்டமின் ‘பி’ பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன, உணவில் மணமூட்டவும், சுவையூட்டவும் புளி பயன்படுகிறது. புளி மட்டுமல்ல, கொழுந்து, புளி இலைகளும் சமைக்கப்பட்டு உண்ணப்படுகின்றன. மேலும் புளியங்கொட்டையில் 63% மாவுப்பொருட்களும், 14-18% ஆல்புமினும், 4.5-6.5% பாதி உலரும் எண்ணெய்யும் இருக்கின்றன.


புளியின் மருத்துவ குணங்கள்

புளிய மரத்தின் இலை, பழம், பட்டை எல்லாமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது. பிலிப்பைன்ஸில் இலைகள் ‘டீ’ யாக தயாரிக்கப்பட்டு, ஜுரம் தணிய உபயோகப்படுத்தப்படுகிறது. வயிறு, ஜீரணக்கோளாறுகளுக்கு மருந்தாகிறது. புளி நீரில் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப்போட ரத்தக் கட்டுகள் கரையும். புளியம் தண்ணீரை கொப்பளித்தால் வாய்ப்புண் ஆறும். புளியுடன் சுண்ணாம்பு கலந்து குழப்பி சூட்டோடு தேள் கொட்டிய இடத்தில் போட, தேள் விஷம் இறங்கும். புளியங்கொட்டை பருப்பை இடித்து பொடியாக்கி, பசும்பாலில் அரைக்கரண்டி தூளைபோட்டு கற்கண்டு கலந்து குடித்து வர தாது விருத்தி உண்டாகும். புளியங்கொழுந்துடன் பருப்பு சேர்த்து செய்த கூட்டை சாப்பிட்டு வர உடல் நலம் பெறும்.

Tags : Highway, sour trees, produce, revenue
× RELATED விவசாயி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!