யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர்: நிரப்பும் பணியில் ஊழியர்கள் தீவிரம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில் வறட்சி தலைதூக்கியுள்ள நிலையில், யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனப்பகுதி தொட்டிகளில்  தண்ணீர் நிரப்பும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்திற்குட்பட்ட பென்னாகரம் வனப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட யானைகள், குரங்குகள், மான்கள், உடும்பு உள்ளிட்ட வன விலங்கினங்கள்  வசித்து வருகின்றன. வனத்தில் வாழும் யானை உள்ளிட்ட மிருகங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வனத்துறை சார்பில் 5 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 1 அடி ஆழத்தில் ஒரு ஹெக்டேருக்கு 20 குழிகள் வீதம் வெட்டப்பட்டுள்ளது. இந்த குழிகள் ஓடைகளின் அருகே அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து ஒகேனக்கல் வனப்பகுதிக்கு 200க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்து வந்துள்ளன. பல்வேறு குழுக்களாக சுற்றித்திரியும் இந்த யானைகள் கடந்த சில நாட்களாக நீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் நுழைவது அதிகரித்துள்ளது. யானைகளின் அட்டகாசத்தால் வெளியில் நடமாட முடியாமல் கிராம மக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த யானைகளை, வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

இதனால், அந்த யானைகள் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்துள்ளன. குறிப்பாக காவிரி ஆற்று படுகை அமைந்துள்ள ஒகேனக்கல் பகுதியில் ஏராளமான யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள், பகல் நேரங்களில் ஒகேனக்கல் அருகே உள்ள வனக்கிராம சாலைகளில் உலா வர துவங்கியுள்ளன. இந்நிலையில், கோடைக்கு முன்பே நிலவும் கடுமையான வறட்சியால் வனத்தில் உள்ள இலை தழைகள் காய்ந்து சருகாகி வருகின்றன. அதனை சாப்பிடும்போது அதிகளவில் தண்ணீர் தாகத்தால் வனவிலங்குள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, யானைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், விவசாய நிலங்களுக்குள் செல்லாமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் வனப்பகுதியான சின்னாறு மற்றும் ராசிக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆற்றுப்படுகையில் பொக்லைன் இயந்திரம் கொண்டு சிறு சிறு பள்ளங்களையும் ேதாண்டி வருகின்றனர். இந்த பள்ளங்களில் மூன்று நான்கு அடி ஆழத்தில் தண்ணீர் ஊற்றெடுத்து வருகிறது. இந்த தண்ணீரை யானை உள்ளிட்ட வன விலங்குகள் குடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories: