வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை தொடங்கிவைப்பது பெருமையானது: டிரம்பை வரவேற்க இந்தியா எதிர்நோக்குகிறது...பிரதமர் மோடி டுவிட்

டெல்லி: குடும்பத்தினருடன் இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை அகமதாபாத் வருகை தருகிறார். நாளை  பிற்பகல் இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப், அவரது மகள் இவான்கா, மருமகன் ஜாரெட்  குஷ்னர் மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் குழுவினர் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து இந்திரா பாலம் மற்றும் கோட்டேஷ்வர்  கோயில் வழியாக மோட்டேரா கிரிக்கர் மைதானம் செல்கின்றனர்.

இவர்களை வரவேற்பதற்காக சாலையோரம் இந்திய பாரம்பரிய கலாசாரத்தை சித்தரிக்கும் 28 நிலைகளை ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை  அகமதாபாத் மாநகராட்சி (ஏஎம்சி) அதிகாரிகள் செய்துள்ளனர். அகமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய மோட்டேரா மைதானத்தை அதிபர் டிரம்ப் திறந்து  வைக்கவுள்ளார். ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக அகமதாபாத் விமான  நிலையம் வந்திறங்கும் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு விமான நிலையத்தில் ‘சங்க்நாத்’ எனப்படும் சங்க நாதம் இசைத்து  வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பிரம்மநாதம் என்று அழைக்கப்படும் இந்த ஒலி பிரபஞ்சத்தில் காணப்படும் அதிர்வுகள் மற்றும் ஆற்றல்களையும் நேர்மறை எண்ணங்களையும்  உள்ளிளுக்கும் என நம்பப்படுகிறது. தொடர்ந்து 150 அடி நீள சிவப்புக் கம்பளத்தில் நடந்து வரும் டிரம்ப் தம்பதியை வரவேற்க நாட்டுப்புறக் கலைஞர்களின்  நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. அதிபர் டிரம்ப், அகமதாபாத் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவிலுள்ள உலக அதிசயமான  தாஜ்மகாலுக்கு தனது மனைவி, மகள், மருமகனுடன் சென்று சுற்றிப் பார்க்கவுள்ளார்.

நாளை மறுநாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு, பிரதமர் மோடியுடனான ஆலோசனை, அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு  உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கவுள்ளன. அதன்பின், 2 நாள் இந்திய பயணத் திட்டத்தை முடித்துக்கு கொண்டு டிரம்ப் குழுவினர் வாஷிங்டன் புறப்பட்டு  செல்கின்றனர்.  இந்நிலையில், இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்க இந்தியா எதிர்நோக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில்  பதிவிட்டுள்ளார்.

இது குறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், டிரம்ப்பை வரவேற்கும்  வகையில், ஒட்டுமொத்த குஜராத்தும் நமஸ்தே டிரம்ப் என ஒலிக்கிறது என பதிவிட்டிருந்தார். இந்த டுவிட்டை குறிப்பிட்டு பிரதமர் மோடி, தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: டிரம்பை வரவேற்க இந்தியா எதிர்நோக்குகிறது. நாளை எங்களுடன்  சேர்ந்து, அகமதாபாத்தில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை தொடங்கிவைப்பது பெருமையானது என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: