மண்ணோடு சேராததால் அபாயம்: நீரின் வேரை அறுக்கும் சிமெண்ட் சாலைகள்: வீணாக போகும் மழைநீர்

சேலம்: தமிழகத்தில் அவசரத் தேவைக்காக அமைக்கப்படும் சிமெண்ட் சாலைகள், நீரின் வேரை அறுத்துவிடும் அபாயம் கொண்டவை என்று இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கிராமங்கள், நகரம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது உள்ள சாலைகளை சீரமைத்து வருகின்றனர். இதில் நகரப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகள், தார் கொண்டும், தரைதள ஓடுகள் கொண்டும், சிமெண்ட் கொண்டும் அமைத்து வருகின்றனர். முன்பு பல ஊர்களுக்கு சாலையே இருக்காது. ஆனால் தற்போது பெரும்பாலான கிராமங்களில் தெருக்கள் அனைத்தும் அவசரத்திற்கு போடப்பட்ட  சிமெண்ட் சாலைகளே அதிகளவில்  காட்சியளிக்கிறது. இதே போல் பாதாள சாக்கடை திட்டம், ஓடைகள்,  ஆறுகள், ஏரிகள் மறுசீரமைப்பு திட்ட பணி்களுக்கும் சிமெண்ட் கலவையே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மழை நீர் பூமியோடு கலப்பது தடைபட்டு, சாக்கடையில் வீணாக கலக்கிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டத்திற்கும் இது அபாயத்தை ஏற்படுத்தும் என்பது இயற்கை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல். இது குறித்து இயற்கை மேம்பாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது: மலையில் உற்பத்தியாகி சமவெளிக்கு வருபவை ஆறுகள். அதே போல் இயற்கை நமக்கு அளிக்கும் மி்கப்பெரிய வரம் மழை. இப்படி மழையாலும்,  ஆறுகளாலும் உருவாகி பெருக்கெடுத்து ஓடும் நீருக்கு, மண் என்பது வேரைப் போன்றது. அது மண்ணை ஈரமாக்கி, பூமியின் ஆழப்பகுதிக்கு செல்வதால் தான், நிலத்தடி நீர் மட்டம் மேம்படுகிறது.

தொடர்ச்சியான மழை இல்லாத காலங்களில் கூட, நிலத்தடி நீர் மட்டம் நன்றாக இருந்தால் அதிகளவில் விவசாயத்திற்கும், இதர நீர் தேவைகளுக்கும் பிரச்சினை வராது. ஆனால் தற்போது பல இடங்களில் சிமெண்ட் சாலைகளை அவசரத்திற்கு அமைத்துள்ளனர். சிமென்ட் என்பது இயல்பாகவே நீரை இழுத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. நல்ல மழை பெய்யும் போது, இது போன்று சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்ட இடங்களில் நீரை பூமி எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அறவே இருக்காது. மழை நீரும் வீணாகி சாக்கடையில் மட்டுமே கலக்கும். எனவே இது போன்ற அபாயங்களை தவிர்க்க தரைதள ஓடுகள் கொண்டு சாலை அமைக்கலாம். அந்த ஓடுகளின் கீழ் ஜல்லி மற்றும் மணல் கொண்டு நிரப்பி அதன் மீது அந்த ஓடுகளை பதிக்கலாம். இப்படி அமைப்பதால்  ஓடுகளின் இடையே உள்ள துவாரங்கள் வழியே மழைநீர் நிலத்திற்குள் சென்றடையும். இதேபோல் சாலைகள் அமைக்கும் போது, புறங்களிலும் தண்ணீர் பாய்ந்து செல்வதற்கு வசதியாக இரும்பு வலை கம்பிகளையும் அமைக்க வேண்டும்.  இதன் மூலமும் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: