×

மீண்டும் வெடிக்கும் போராட்டம்; விளைநிலங்களை அழித்து எரிவாயு குழாய்கள்: தூத்துக்குடி பகுதிகளில் தரிசாக மாறும் தாமிரபரணி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை  அருகே உள்ள குலையன்கரிசலில் விளைநிலங்களை அழித்து எரிவாயு குழாய் பதிக்க  விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் தாமிரபரணி  விவசாய நிலங்கள் தரிசாக மாறும் அபாயம் உருவாகியுள்ளது. நெல்லை,  தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி பாசனம் மூலம் 86 ஆயிரத்து  107 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இதில் தூத்துக்குடி  மாவட்டத்தில் மட்டும் 46 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்கள் அடங்கும்.  தாமிரபரணி ஆற்றின் அதிக பாசனம் தூத்துக்குடி மாவட்டத்தில்தான் உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில்  இருந்து தூத்துக்குடிக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம்  எரிவாயு குழாய் பதிக்கப்படுகிறது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்  இத்திட்டத்திற்கு 2017ம் ஆண்டு அனுமதி வழங்கியது.

இந்த எரிவாயு குழாய்  பதிக்கும் பணி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் நிறைவடைந்த நிலையில் தூத்துக்குடி ஒன்றியத்துக்குட்பட்ட வைகுண்டம் வடகால் பாசன பகுதிகளான குலையன்கரிசல், பொட்டல்காடு  ஆகிய இடங்களில் சுமார் 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள் வழியாக பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை, உளுந்து ஆகிய பயிர்கள் நாசமாகும் நிலை உருவாகியுள்ளது. தற்போது  இப்பகுதிகளில் நெல் பயிரிடப்பட்ட விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்க இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் முற்பட்டனர். இதனை கண்டித்து விவசாயிகள், கிராம மக்கள் சார்பில் 4 முறையும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒரு முறையும் தூத்துக்குடி கலெக்டரிடம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் கடந்த ஜூலை 17ல் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருக்கும்  போராட்டம் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து  தூத்துக்குடி தாசில்தார் நடத்திய சமாதானப்  பேச்சுவார்த்தை கூட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனம் வழியாக கொண்டு  செல்லாமல் மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல விவசாய சங்கம் சார்பில்  வலியுறுத்தப்பட்டது. பின்னர் 48 கண்மாய் கரையோரமாக உப்பாற்று ஓடை வழியாக  எரிவாயு குழாய் பதிக்க வேண்டும். கிராமத்தின் அருகே எரிவாயு குழாய் கொண்டு  செல்லக்கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். அதை அதிகாரிகள்  பரிசீலிப்பதாக கூறினர். இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்த நிலையில்,  கடந்த மாதம் திடீரென மீண்டும் எரிவாயு குழாய் அமைக்க விளைநிலங்கள்  அழிக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குழாய்களை கொண்டு வந்த வாகனங்களை குழாயை இறக்க விடாமல்  திருப்பி அனுப்பினர். பொட்டல்காடு கிராமத்தில் அரசு பள்ளி,  குடியிருப்பு, கல்லூரிகள் அருகிலும் ஊர் மத்தியிலும், நன்செய் விவசாய  நிலத்திலும் எரிவாயு குழாய்கள் அமைக்க இருப்பதை கண்டித்தும், எதிர்ப்பு  தெரிவித்தும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முள்ளக்காடு பஞ்சாயத்து  அலுவலகத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கடந்த 11ம் தேதி மதியம் குலையன்கரிசல் பகுதியில் உள்ள நெற்பயிர்களை  அழித்து விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க குழி தொண்டப்பட்டது.  விவசாயிகள் திரண்டு வந்ததால் அதிகாரிகள் ஓட்டம் பிடித்தனர். விளை நிலங்களில் எரிவாயு குழாய்கள் அமைப்பதை கண்டித்து தாமிரபரணி வைகுண்டம்  வடகால் பாசனம் மூலம் பயன்பெறும் குலையன்கரிசல், பொட்டல்காடு, முள்ளகாடு, அத்திமரப்பட்டி, கோரம்பள்ளம், காலாங்கரை, கூட்டாம்புளி, சேர்வைக்காரன்மடம், உமரிக்காடு,

சிவகளை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம விவசாயிகள் நேற்று (22ம்  தேதி) முதல்வர் வருகையின்போது உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி  கேட்டனர். ஆனால் அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர். இதற்கிடையே  குலையன்கரிசல் கிராம விவசாய சங்கத்தின் சார்பாக கடந்த செப்டம்பர் மாதம்  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், விவசாயிகளுக்கு  முறையான நோட்டீஸ் அனுப்பி அறிவிப்பு செய்து அனுமதி பெற்று சட்டவிதிகளுக்கு  உட்பட்டே எரிவாயு குழாய் பதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த நீதிமன்ற உத்தரவை மீறி விவசாய நிலங்களில் அத்துமீறி  விவசாய நிலங்களையும், நெற்பயிர்களையும் சேதப்படுத்தியதாக மத்திய அரசின்  பெட்ரோலிய துறை செயலாளர், தமிழக வருவாய் துறை செயலாளர், இந்தியன் ஆயில்  கார்ப்பரேசன் பொறுப்பு அதிகாரி, தூத்துக்குடி கலெக்டர் ஆகியோர் மீது நீதிமன்ற  அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயி ஆஸ்கார்  கூறுகையில், விவசாய நஞ்சை நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதால் விவசாயம்  முற்றிலும் அழிந்து விடும் அபாயம் உள்ளது. குலையன்கரிசல், பொட்டல்காடு  ஆகிய பகுதிகளில் உப்பு, உவர் நிலங்களாக இருந்த நிலங்களை எங்களது  முன்னோர்கள் ஆடு, மாடு ஆகியவற்றின் சாண உரங்கள், வண்டல் மண், கரிசல் மண்  ஆகியவற்றை பயன்படுத்தி விவசாய நிலங்களாக மாற்றினர். எரிவாயு குழாய்  பதிப்பதால் கீழே உள்ள உப்பு உவர் மண் விவசாய நிலங்களில் பரவி விவசாயம்  செய்ய முடியாத லாயக்கற்ற பூமியாக மாறிவிடும். இதன் மூலம் தாமிரபரணி பாசனம்  தரிசாக மாறிவிடும். எனவே விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்காமல்  அரசுக்கு சொந்தமான மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க  வேண்டும், என்றார். வற்றாத ஜீவநதி என பெயர் பெற்றது தாமிரபரணி.

அந்தத் தாமிரபரணி பாசனத்திலும் வறட்சி, தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர்  விநியோகம் ஆகியவற்றை கடந்து விவசாயிகள் நெல், வாழை விவசாயம் செய்து  வருகின்றனர். தற்போது எரிவாயு குழாய் என்ற புதிய சோதனை வந்துள்ளது. காவிரி  டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த அரசு தாமிரபரணி  பாசனத்தையும் பாதுகாக்க வேண்டும். அதை மறந்து விளைநிலங்கள் வழியாக எரிவாயு  குழாய் பதித்தால் தாமிரபரணி பாசன நிலங்கள் எதிர்காலத்தில் தரிசாக  மாறிவிடும்.

அரசுதான் காக்க வேண்டும்
விவசாய சங்கத்தை சேர்ந்த ஜெகன் கூறியதாவது: இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்  நிறுவனத்தினர் கடந்தாண்டு உளுந்து பயிர்களை அழித்து நாசம் செய்து எரிவாயு  குழாய் அமைக்க முயன்றபோது விவசாயிகளால் விரட்டப்பட்டனர். இதுகுறித்து அரசு  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல் விளைந்த நெற்பயிர்களை  பொக்லைன் இயந்திரம் மூலம் அழித்து நாசம் செய்தனர். விவசாயிகள் திரண்டு  வந்தபோது ஐஓசிஎல் அதிகாரிகள் ஓட்டம் பிடித்தனர். இது சம்மந்தமாக புகார்  அளித்தும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு உடனே  தலையிட்டு உடனே நடவடிக்கை எடுத்து விவசாயிகளையும், விவசாய நிலங்களையும்  காப்பாற்ற வேண்டும். இவ்வாறு கூறினார்.

பாதையை மாற்ற சாத்தியக்கூறு இல்லை
ஐஓசிஎல் நிறுவனம் சார்பில் சென்னை தெற்கு மண்டல தலைமை பொதுமேலாளர் தங்கராஜ் கூறுகையில், ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரை 142 கிமீ  நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் பணி 53 வருவாய் கிராமங்களின் ஒத்துழைப்புடன் விவசாய நிலங்களை கடந்து 134 கிமீ வரை பணி நிறைவடைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல், பொட்டல்காடு ஆகிய இரு கிராம மக்களின் ஆதரவு இல்லாததால் பணிகள் தடைபட்டு உள்ளது. இந்த குழாய் பதிப்பதனால் பொட்டல்காடு கிராம மக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லை. குழாய் பதித்தபின் மீண்டும் எந்தவிதமான தடையும் இன்றி விவசாயம் செய்யலாம்.

கிராம  மக்கள் அஞ்சும் வகையில் விவசாயம் பாதிக்காது. குழாய் வழிப்பாதையை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. மீதி எஞ்சிய 8 கிமீ தூரத்தில்  இப்பணிகள் நிறைவுபெறும். குழாய் மூலமாக எரிவாயு எடுத்துச் செல்வது மிகவும்  பாதுகாப்பானது. எதிர்காலத்தில் வீட்டு உபயோகத்திற்காக குழாய் மூலம் சமையல் ஏரிவாயு வழங்குவதன் மூலம் பொதுமக்கள் பெருமளவில் பயன்பெறுவர். இவ்வாறு  அவர் தெரிவித்தார்.

Tags : areas ,fight ,Thoothukudi ,farmland , Struggle, Gas pipes, Thoothukudi
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் உலர் களம் அமைக்க கோரிக்கை