பி.எம்.ஏ.ஒய் திட்டத்தில் வீடு கட்ட ரூ.3,151 கோடி நிதி தாமதம்

கோவை: தமிழகத்தில் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 2.17 லட்சம் வீடுகளுக்கு மானிய நிதியாக 3,151 கோடி ரூபாய் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. மானியத்தை நம்பிய கடன் வாங்கி வீடு கட்டியவர்கள் வட்டி கட்ட முடியாமல் திணறி வருகின்றனர். தமிழகத்தில் பாரத பிரதமரின் வீட்டு வசதி திட்டம் (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா) கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. இந்த திட்டத்தில் மாநில அளவில் ஏழை, நடுத்தர மக்கள் வீடு கட்ட மானியம் வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் பெயரில் வீடு கட்ட இந்த திட்டத்தில் தாராள மானியம் வழங்கப்படுகிறது. வீடு கட்டும் பெண்களின் பெயரில் ஏற்கனவே வீடு இருக்கக்கூடாது. குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் இருந்தால் பலவீனமான வருவாய் பிரிவில் (இ.டபிள்யூ.எஸ்) 2.67 லட்ச ரூபாய் தொகை மானியமாக பெறலாம். இந்த தொகையை நேரடியாக பணமாக பெற முடியாது.

வங்கியில் கடன் பெறும் பெண்களின் பெயரில் மானிய தொகை சேர்க்கப்படும். நடுத்தர வருவாய், குறைந்த வருவாய் பிரிவில் பெண்கள் 2.30 லட்ச ரூபாய் மானிய உதவி பெற முடியும். ஆண்டு குடும்ப வருமானம் 3 முதல் 6 லட்ச ரூபாய் இருந்தாலும் ஏற்கப்படுகிறது. 30 சதுர மீட்டர் முதல் 200 சதுர மீட்டர் வரை வீடு கட்டுவோர் இந்த திட்டத்தில் மானியம் பெறலாம். குடிசைகள் இல்லாத பகுதிகளை உருவாக்கவும், பெண்களை குடும்ப தலைவர்களாக உருவாக்கவும் இந்த திட்டம் பிரதானமாக கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக பெண் பயனாளிகள் பெயரில் வீடு கட்டுவது கணிசமாக அதிகரித்தது. மாநில அளவில் இந்த திட்டத்தில் வீடு ஊரக வளர்ச்சி திட்டத்தின் மூலமாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மாநில அளவில் 2019-2020ம் ஆண்டு (கடந்த 17ம் தேதி வரை) 5,27,552 பேர் விண்ணப்பித்தனர்.

இந்த விண்ணப்பங்களில், 4,61,870 பேரின் விண்ணப்பங்கள் பதிவிற்கு ஏற்கப்பட்டது. பதிவு பெற்றவர்களில் 4,08,175 பேரின் விண்ணப்பங்கள் புவியியல் தகவல் பதிவிற்கு (ஜியோ டேக்) உட்படுத்தப்பட்டது. இதில் வீடு கட்ட 3,83,662 பேருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இவற்றில் 2,17,132 வீடுகள் கட்டி முழுவதும் முடிக்கப்பட்டது. இந்த வீடுகளுக்கு மானிய தொகையாக 6,487 கோடி ரூபாய் மானியமாக வழங்கவேண்டியுள்ளது. இதில் 3,336 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. இன்னும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 3,151 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மானிய தொகையில் வீடு கட்டும் பயனாளிகள் கூறுகையில், ‘‘வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டி வருகிறோம். 18 மாதம் கடந்தும் மானியத்தொகை வழங்கப்படவில்லை. சிலருக்கு 2 ஆண்டு கடந்த பின்னரே ஒரு பகுதி மானியத்தொகை வழங்கப்பட்டது.

மீதமுள்ள மானியம் எப்போது வழங்கப்படும் என தெரியாத நிலையிருக்கிறது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சி துறையினரை அணுகி கேட்க முடியாத நிலையிருக்கிறது. இந்த திட்டத்திற்கு யார் அதிகாரிகள், விண்ணப்பங்களின் நிலை என்ன? என்ற விவரங்களை பயனாளிகள் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்படவில்லை. மானியம் ஒதுக்கீடு செய்தால் வங்கி கணக்கில் பணம் சேர்க்கப்படும், அதுவரை காத்திருக்கவேண்டும் என்ற நிலையிருக்கிறது. மானியம் தாமதமாகி வருவதால் எங்களுக்கு வட்டி சுமை அதிகமாகி வருகிறது’’ என்றனர். இது குறித்து தமிழக அரசின் ஊரக வளர்ச்சி திட்டத்தினரிடம் கேட்டபோது, ‘‘மத்திய அரசின் முழு நிதியும் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. நிதி எப்போது விடுவிக்கப்படுகிறது என தெரியாது. கடந்த 2 ஆண்டாக பி.எம்.ஏ.ஒய். திட்டத்தில் வீடு கட்டுவது ஏறக்குறைய இரு மடங்கு அதிகமாகி விட்டது.

விண்ணப்பங்களை பரிசீலிக்கவே பல மாதங்களாகி விடுகிறது. தகுதியில்லாத பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுவதில்லை. தகுதியுள்ள பயனாளிகளுக்கு நிதி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படவில்லை. தாமதத்தை தவிர்க்க முடியாத நிலையிருக்கிறது’’ என்றனர்.

பசுமை வீடுகள், இந்திரா காந்தி திட்டமும் தாமதம்

தமிழக அரசின் பசுமை வீடுகள் திட்டமும், இந்திரா காந்தி வீட்டு வசதி திட்டமும் மானிய ஒதுக்கீடு குறைவினால் தாமதமாகி வருகிறது. அரசு அறிவித்த அளவுகளில் மாற்றம் இருந்தால் மானியம் வழங்கப்படுவதில்லை. இதனால் பயனாளிகள் அதிருப்தியடைந்துள்ளனர். சிலர் மானிய ஒதுக்கீட்டிற்காக காத்திருக்காமல் வீட்டை கட்டி விடு்கின்றனர். குடிசைகளை ஒழிக்க ஏழைகளின் சொந்த வீ்ட்டு கனவை நனவாக்க உருவாக்கப்பட்ட இந்த திட்டங்கள் ஏழைகளுக்கு மேலும் நெருக்கடியை, சுமையை ஏற்படுத்தி வருகிறது. வீடு கட்டுவதற்கான மானியங்களை தாமதம் செய்யக்கூடாது என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories: