வறுமை, தனிமை, முதுமையால் தவிக்கும் முதியோருக்கு வீடு தேடி செல்கிறது உணவு

ஈரோடு:  ஈரோட்டில் தனிமை மற்றும் முதுமையால் தவிக்கும் முதியோருக்கு வீடு தேடிச்சென்று உணவு வழங்கும் சமுதாய பணி தொடர்கிறது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் மஸ்ஜித் என்னும் தன்னார்வ சேவைக்குழு இயங்கி வருகிறது. இந்த குழுவினர் அனைத்து சமுதாயத்திலும் உள்ள ஏழை குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு பல ஆண்டுகளாக உதவி செய்து வருகிறார்கள். தற்போது, இக்குழுவினர் ஈரோடு பெரியஅக்ரஹாரம், கருங்கல்பாளையம் பகுதியில் சமையல் செய்து உணவுகளை தயார் செய்து ஆர்.என்.புதூரில் இருந்து ஈரோடு சாஸ்திரிநகர் வரை முதுமையில் உள்ளவர்கள் மற்றும் வறுமை, தனிமையில் தவிப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வீடு தேடி சென்று, உணவு வழங்கும் சேவையை செய்து வருகின்றனர்.  

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வெறும் 5 பேருக்கு உணவு வழங்கி துவங்கினர். இந்த எண்ணிக்கை தற்போது 200 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தினசரி 25 குடும்பங்களுக்கு 1,200 ரூபாய் மதிப்பில் மளிகை பொருட்கள், பழங்கள் மற்றும் இறைச்சி வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தன்னார்வலர்களை கொண்டு இந்த உணவுகளை வீடு தேடி வழங்கி வருகின்றனர். தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் அளிக்கும் நன்கொடை உதவியுடன் இந்த சேவையை தொடர்ந்து செய்து வருகின்றனர். ஈரோடு பகுதிகளில் வறுமையாலும், வெளியே சென்று பிச்சை எடுக்க தயங்கி சாப்பிட வழியில்லாமலும் இருப்பவர்கள் இருந்தால் அவர்களுக்கு உணவு வழங்க தயாராக இருப்பதாக இந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மஸ்ஜித் சேவை குழுவின் மாநில அமைப்பாளர் சையது இப்ராகிம் கூறியதாவது: கடந்த 2013ம் ஆண்டு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தேன். அப்போது பள்ளி வாசல்களுக்கு சென்று வந்தேன். இறை ஆலயங்கள் அனைத்தும் சேவை மையங்களாக மாற வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. இதனால், பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்ய துவங்கினேன். அதன்பிறகு, இந்த சேவையை செய்ய ஒரு குழு தேவை என உணர்ந்து, மஸ்ஜித் சேவை குழு துவக்கினேன். அதற்கு பிறகு ஏழ்மையான நிலையில் உள்ள 25 குடும்பங்களுக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள், பழவகைகள், இறைச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. எங்கள் சேவை குழு மூலமாக இதுவரை 2,500க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு காப்பீட்டு திட்டத்தின்கீழ் இலவசமாக ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.

ஏழை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் இலவச டியூசன் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் 700 மஸ்ஜித் சேவைக்குழு உள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நான் வீட்டில் இருந்து வந்தபோது ஒரு வயதான மூதாட்டி வந்தார். அப்போது அவருக்கு சாப்பிட பணம் கொடுத்தபோது அதை வாங்க மறுத்து விட்டு, உணவு இருந்தால் கொடு என்று கேட்டார். அதற்கு பிறகு நான் கடையில் சென்று உணவு வாங்கி கொடுத்தேன். அப்போதுதான், வறுமையால் வெளியே சென்று பிச்சை எடுக்க தயங்கி, பசியால் முடங்கி கிடக்கும் முதியவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இதற்காக ஆரம்பத்தில் வீட்டில் 5 பேருக்கு உணவு தயார் செய்து கொடுத்தேன். பின்னர் தன்னார்வலர்களை கொண்டு படிப்படியாக இன்று 200 பேருக்கு, தினமும் 2 இடங்களில் உணவு தயாரித்து வழங்குகிறோம். தினசரி தயிர்சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் தயார் செய்து வழங்குகிறோம்.

ஒவ்வொரு பகுதியிலும் எங்களது தன்னார்வ தொண்டர்கள், இதுபோன்ற முதியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் மாதம்தோறும் 95 லட்சம் ரூபாய் அளவிற்கு நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. இதற்காக தொழிலதிபர்கள் நன்கொடை அளித்து வருகிறார்கள். மேலும் சிலர், அரிசி, பருப்பு, காய்கறி என பொருட்கள் வாங்கிக்கொடுக்கிறார்கள். ஜாதி, மதம் பாராமல், அனைத்து சமுதாய மக்களுக்கும் இந்த சேவையை செய்து வருகிறோம். எதிர்காலத்தில் வறுமை, தனிமை, முதுமையால் தவிக்கும் அனைவருக்கும் உணவு வழங்கவேண்டும் என்பதே எங்களது இலக்கு. இவ்வாறு சையது இப்ராகிம் கூறினார்.

Related Stories: