×

நிலத்தடி நீர்மட்டத்தை சேமிக்க வேண்டுமா? பனை வளர்ப்போம்... பலன் பெறுவோம்

* பல லட்சம் தொழிலாளர்கள் பயன் பெறலாம்
* பாரம்பரிய மரத்தை பாதுகாக்குமா தமிழக அரசு?

மதுரை: இயற்கை சூழியலை பொறுத்தவரை நம்மை அதிகம் கவர்வது மரங்கள். இவை நம் உணவுத்தேவையை மட்டும் நிறைவேற்றுவதில்லை. மழை நீர் சேகரிப்பு திட்டத்தின் மாறுபட்ட ‘வெர்ஷன்’ என்றும் கூறலாம். அதில், குறிப்பாக பனை மரத்திற்கு நிலத்தடி நீரை சேமித்து வைக்கும் ஆற்றல் அதிகம் உண்டு என்கின்றனர். தமிழக அரசின் சமீபத்திய உத்தரவை கேள்விப்பட்டிருப்பீர்கள். வீடு, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்று. இந்தப்பணியைத்தான் பனைமரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செய்து வருகின்றன. ஊரில் ஒரு கிணறு வெட்டுவதாக வைத்துக் கொள்வோம். அந்த கிணற்றை சுற்றிலும் பனைமரங்கள் இருந்தால், கிணற்றின் நீர்மட்டம் அவ்வளவு எளிதாக வற்றாது. அதனால்தான் பாலைவனத்தில் அரிதாக தோன்றும் ஊற்றுக்கு அருகே கூட பனைமரத்தின் மற்றொரு வகையாக கருதப்படும் ஈச்ச மரங்களை வளர்த்து வந்துள்ளனர்.

தமிழகத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பனைமரங்கள் மிகுதியாக காணப்படுகின்றன. நீராதாரங்களை காப்பதாக பனைமரங்களை கூறுகிறோமே? அப்படி என்றால் வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் எப்படி பனை மரங்கள் அதிகரித்தன என்ற கேள்வியை நீங்கள் எழுப்பலாம். அதுதான் பனைமரத்தின் நீர் மேலாண்மை. அதாவது, வறட்சிக்காலங்களிலும் கூட, குறைந்தளவு நீரைக்கொண்டு தாக்குப்பிடிக்கும் தன்மை பனைமரங்களுக்கு உண்டு. இன்னும் சொல்லப்போனால், அந்த மாவட்டத்தில் இருக்க்கூடிய நீர்மட்டத்தை பனைமரங்களே பாதுகாத்தாக பனை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பழங்காலத்தில் வயல் வரப்புகளில் பனைமரத்தை நட்டு வந்திருக்கின்றனர். இதற்கு பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன. பனையில் இருந்து விழக்கூடிய பனம்பழங்கள் மற்றும் இதர பொருட்கள் நெல் நிலத்திற்கு மிகச்சிறந்த இயற்கை உரமாக பயன்பட்டு வந்துள்ளது.

கள் இறக்க தமிழக அரசு தடை விதித்த 1987ம் ஆண்டுக்கு பிறகே பனைத்தொழில் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதன்மூலம் அந்த ஆண்டில் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். அதன்பிறகு பனையேறிகள் இத்தொழிலில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. பன்னாட்டு குளிர்பானங்கள் வருகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பனைமரத்தொழிலை தொடர யாரும் போதிய ஆர்வம் காட்டவில்லை. இதனாலேயே இத்தொழில் நலிவடைந்தது. தமிழகத்தில் தற்போது குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்ட பிரச்னையைத் தடுக்க நீர்நிலைகளின் ஓரம் பனைமரத்தை நடலாம். இதன்மூலம் எதிர்காலத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. எனவே, தமிழக அரசு பனைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து, இத்தொழிலை ஊக்கப்படுத்த வேண்டுமென இயற்கை மற்றும் பனைமர ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மழை நீர் சேகரிப்பு திட்டத்தின் முன்னோடியை நாமும் முன்னெடுத்து செல்வோம். பனை வளர்ப்போம். பயன் பெறுவோம். மனித இனம், இயற்கை... இரண்டுமே ஒன்றுக்கொன்று மாறுபட்டது. வேறுபட்டது என நாம் நினைக்கலாம். இது உண்மை என்றாலும் கூட, இயற்கை சூழியலே மனித வாழ்வாதாரத்தை தீர்மானிக்கிறது. மனித இனம் மட்டும் வாழ்ந்தால் போதாது. நாம் ஆரோக்கியமாக வாழ பல்லுயிர் பெருக்கம் அவசியம். பல்லுயிர் பெருக்கம் நிகழ்ந்தால் மட்டுமே, இனி வரும் காலங்களில் மனிதனே நீண்ட காலம் வாழ முடியுமாம். நாம சொல்லலை... ஆய்வுகள் சொல்கின்றன. இந்த பெருக்கத்தில் மனிதன் மட்டுமல்ல... விலங்குகள், பறவைகள், மரங்கள் எல்லாமே அடக்கம்.

நீர்நிலைகளில் நட்டு ஆக்கிரமிப்பை தடுக்கலாம்
பேராசிரியர் நாகரத்தினம் (தலைவர், தகவல் தொடர்பியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம்) கூறியதாவது: கடந்த ஆண்டு மதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி நீர்நிலைகளில் 3 ஆயிரம் பனை விதைகளை நட்டோம். அதில் ஏராளமான விதைகள் முளைத்து வளர்ந்து வருகின்றன. பனை தமிழர்களின் நல்வாழ்வின் அடையாளம். பனையில் 801 பயன்கள் உள்ளதாக ‘தால விலாசம்’ என்ற குடந்தை அருணாசலம் எழுதிய நூல் தெரிவிக்கிறது. பின்னர் இந்த நூலை வில்லியம் பெர்குசன் என்ற ஆங்கிலேயர் மொழி பெயர்த்து, கடந்த 1888ம் ஆண்டு வெளியிட்டுள்ளார். தால விலாசத்தின் மூலப்பிரதிகள் தற்போது இல்லை. இலங்கையை சேர்ந்த நாவலியூர் சோமசுந்தரப்புலவர், குடந்தை அருணாசலம் மற்றும் தனது தந்தை கூறிய பனைமர தொகுப்புகளை வைத்து ‘தால விலாசம்’ என்ற பெயரிலேயே நூலை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய பாலித்தீன் பொருட்களுக்கு மாற்றாக பனையை பயன்படுத்தலாம். ரசாயனம் மற்றும் செயற்கை உணவுப்பொருட்கள் மலிந்து கிடக்கும் இக்காலத்தில், அதற்கு மாற்றான இனிப்பு பொருட்களை பனை வழங்குகிறது. இவற்றை நீர்நிலைகளில் நடும்போது ஆக்கிரமிப்புகளை தடுக்க முடியும். நீராதாரத்தையும் பாதுகாக்க முடியும். பறவைகள், பூச்சியினங்களுக்கு புகலிடமாகவும் விளங்கும். 10 அடிக்கு ஒரு பனை என்ற வகையில் விதை நடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடேங்கப்பா... 801 அயிட்டமா...
பனைமரத்தில் இருந்து பதநீர், இருமல் மற்றும் சளி உபாதைகளை நீக்கும் பனங்கற்கண்டு இப்படி பல சத்தான உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. உணவு : பனம்பழம், பனாட்டு, நுங்கு, பாணிப்பனாட்டு, பனங்காய், பனங்கள்ளு, வினாகிரி, பதநீர், பனங்கருப்பட்டி, பனைவெல்லம், சில்லுக்கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனஞ்சீனி , பனங்கிழங்கு, ஒடியல், ஒடியல் புட்டு, ஒடியல் கூழ், பனை குருத்து, பனங்கிழங்கு மாவு,  பனங்கிழங்கு சத்துமாவு, பனம்பழம் ஜுஸ். பயன்பாட்டு பொருட்கள் : நீற்றுப் பெட்டி, கடகம், பனைப்பாய், கூரை, வேலி, பின்னல், பனையோலைப் பெட்டி, கிணற்றுப் பட்டை, எரு. துலா, பனம் மட்டை. தட்டிகள் , கங்குமட்டை, விறகு, தண்டு , பனம்விதை, எபொருள். இப்படி பனைமரத்தில் மட்டும் 801 வகையான உணவு மற்றும் பயன்பாட்டு பொருட்கள் கிடைக்கின்றன. வேறு எந்த மரமும் தன்னை ‘பெருங்கொடையாக’ மனிதனுக்கு வழங்குவதில்லை.

விதைப்பது எப்படி?
தென்னங்கன்று நடுவது போல பனைமரம் வளர்ப்பது எளிதானதுதான். காய வைத்த பனை விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். மண்வெட்டியால் மண்ணை லேசான ஆழத்தில் கொத்தி விட்டு விதையை போட்டால் போதும். 10 அடிக்கு
1 என்ற அளவில் நடலாம்.

அரண்மனை கூரையும்... ஆயிரமாண்டு பாரம்பரியமும்...
பனை மரஆய்வு கட்டுரையாளர் காட்சன் சாமுவேல் கூறியதாவது: தொல்பழங்காலத்தில் இருந்தே பனைமரம் பயன்பாட்டில் இருந்துள்ளது. பொதுவாக, அடர்காடுகளில் பனை மரத்தை பார்க்க முடியாது. மனிதர்களோடு இந்த மரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்பில் உள்ளது. சாதாரணமாக, பனைமரம் 15 - 20 ஆண்டுகளில் துவங்கி 120 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். இது நிலத்தின் தன்மையை மாற்றி அமைக்காது. எந்தவிதமான இயற்கை சூழலிலும் வளரும் தன்மையுடையது. ஒரு ஒற்றை பனைமரத்தை நம்பி எறும்பு, பூச்சிகள், ஈக்கள், தேனீக்கள், பல்லி, பூரான், பாம்பு, 30க்கும் மேற்பட்ட பறவைகள். பனங்காடை, பனை ஓலையில் வசிக்கும் பொன்னிக்குருவி மற்றும் மரநாய் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன.

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனை மரம் பவுத்தர்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது. பழங்காலத்தில் முதன்முதலாக தோல் எழுதுபொருளாக இருந்தது. இதன் மாற்றாக பனை ஓலை வந்தது.   தமிழக கோயில்கள் பனங்காடுகளை மையப்படுத்தி வந்துள்ளன. திருஞானசம்பந்தர் பனையை பற்றி பல விஷயங்களை பாடி வந்துள்ளார். பனைமரத்தை ‘தாய் காளி’ என்றும் அழைத்து வந்துள்ளனர். ஜாதி, சமூகம் தாண்டி மும்மதத்தினரும் இதை பயன்படுத்தியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பேரீச்சை இனத்தை சேர்ந்தது என்பதால் இஸ்லாமிய மன்னர்கள் இவற்றை அதிகம் நேசித்துள்ளனர்.  மேலும்,  கிறிஸ்தவர்களின் குருத்தோலை பவனியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பனைமரம் உப்புக்காற்றில் உறுதியடையும் தன்மையுடையது. அதனால்தான் பனைமரங்களை கடற்கரையோரம் வளர்த்து வந்துள்ளனர். தமிழகத்தில் சில பண்டிகைகளில் பனை ஓலை கொழுக்கட்டைகளை சுடுவது, கோயில்களில் பிரசாதமாக கற்கண்டு, கருப்பட்டி தருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பனைஓலையின் மணமே கொழுக்கட்டையை மேலும் சுவையாக்குகிறது. மன்னர் காலங்களில் பனை ஓலைகளை கொண்டே அரண்மனை கூரை வேயப்பட்டுள்ளது. வீடுகளில் பாதுகாப்பு வேலியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பேரிடர் காலத்தில் கூட பனை எளிதில் சாயாது
பனைமர ஆர்வலர் பனை சதீஷ்  கூறியதாவது: கஜா புயலில் தென்னை மரங்கள் அதிகம் வீழ்ந்தன என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பனைமரம்A 3 வகையான வேர்த்தன்மை கொண்டது. வெளிப்புற வேர் மழை நீரை வேகமாக உள்ளே கொண்டு செல்லும். உள்வேர் மழை நீரை சேமித்து வைக்கும். நடுமையத்தில் உள்ள கிடைக்கும் நீரை கொஞ்சம் கொஞ்சமாக உச்சிக்கு அனுப்பி வைக்கிறது. இதனால் அதிகம் நீர் தேவைப்படாது. இதன் முக்கிய வேரானது மண்ணிற்குள் 100 அடி முதல் 150 அடி ஆழம் வரை செல்லும். இதனால் பேரிடர் காலங்களில் கூட பனை எளிதில் சாயாது.

25 ஆண்டுகளுக்கு 8 கோடி பனைமரங்கள் இருந்த இடத்தில் தற்போது 4 கோடி மரங்களே உள்ளன. இவற்றில் 10 லட்சம் மரங்களே  பயன்பாட்டில் உள்ளன.பனைமரத்தில் பெறப்படும் பானத்தில் சுண்ணாம்பு சத்தை சேர்க்கும்போது கிடைப்பது பதநீர். போடாவிட்டால் அது கள். கள்ளில் வெறும் 4 சதவீத இயற்கை ஆல்கஹால் மட்டுமே உள்ளது. குடித்தால் உடலுக்கு மிதமிஞ்சிய சுறுசுறுப்பை கொடுக்கும். அதனால்தான் நம் முன்னோர்கள் பதனீர், கள் குடித்து விட்டு நாள் முழுவதும் வயல்வேலைகளை பார்த்து வந்துள்ளனர். அது மட்டுமல்ல... ஒரு கிணறை சுற்றி 10 பனைமரம் வைத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படும்.

கிணறு எளிதில் வற்றாது. அதனால்தான், நீர் பராமரிப்புக்காக வயல்வெளிகள், குளங்களில் பனைமரங்கள் அதிகம் வைக்கப்பட்டன. காட்டு விலங்குகளை பாதுகாக்க உயிர்வேலியாகவும் இதனை பயன்படுத்தி உள்ளனர். எந்த விலங்கும் உள்ளே நுழைய முடியாதபடி நெருக்கமாக போட்டிருப்பார்கள். தண்ணீர் இல்லாத சூழலிலும் பனை எளிதில் காயாது. இலைகள் பச்சையாகவே இருக்கும்.  இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கள் உணவு தேடும் பட்டியலில் இருக்கிறது. மனிதர்களின் பாரம்பரியத்தோடு கலந்து பனைமரத்தை மீட்டெடுக்க வேண்டும்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
தமிழகத்தை பொறுத்தவரை ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள், பிற மாநிலங்களில் மேற்குவங்க மாநிலம் வரை பனை மரங்கள் பரவலாக வளர்ந்துள்ளன. இதன் உணவு மற்றும் பயன்பாட்டு பொருட்கள், ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மன், பெல்ஜியம், இத்தாலி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன்மூலம் இந்தியாவுக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடி வரை அந்நியச்செலாவணி கிடைக்கிறது. இதன் பயன்பாட்டை அதிகரிக்கும்போது ஆண்டுக்கு ரூ.500 கோடி வரை அந்நிய செலவாணியை எட்டலாம் என பனைமர ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Groundwater, palm, yield
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை