குரங்கணி வனப்பகுதியில் தடையை மீறி ‘டிரெக்கிங்’?: தீ வைத்து சமைப்பதால் மீண்டும் பயங்கர விபத்து ஏற்படும் அபாயம்

தேனி: தீ விபத்து நடந்த குரங்கணி வனப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகள் தடையை மீறி டிரெக்கிங் செல்வதாக புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டம், போடி வனச்சரகத்திற்கு உட்பட்ட குரங்கணி வனப்பகுதியில் கடந்த 2018, மார்ச் 11ம் தேதி பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் குரங்கணியில் இருந்து கொழுக்கு மலைக்கு டிரெக்கிங் (மலையேற்ற பயிற்சி) சென்ற 21 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதனையடுத்து கொழுக்குமலைக்கு டிரெக்கிங் செல்ல வனத்துறை தடை விதித்தது. குரங்கணியில் இருந்து கொழுக்குமலையை தவிர வேறு பகுதிக்கு மலையேற்றம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ளதால் தேனி மாவட்ட வனத்துறை குரங்கணியில் இருந்து டிரெக்கிங் செல்ல கடந்த 15ம் தேதி முதல் தடை விதித்தது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை நீடிக்கும் எனவும் வனத்துறை தெரிவித்தது.ஆனால் குரங்கணியில் இருந்து தடையை மீறி வனத்துறையினரின் ஆதரவோடு சிலர் மலையேற்றம் சென்று வருவதாக புகார் எழுந்துள்ளது. வனப்பகுதிக்குள் செல்பவர்கள் மதுபாட்டில்களை எடுத்துச் செல்வதோடு அங்கேயே தீயிட்டு சமையல் செய்து சாப்பிட்டும் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வன ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘குரங்கணி வனப்பகுதிக்கு செல்வதற்கு முன்பாக சோதனை சாவடி உள்ளது. எனினும், அரசு அதிகாரி என்ற பெயரிலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் என்ற பெயரிலும் செல்வோரை தடுத்து நிறுத்தாமல் வனத்துறையினர் வேடிக்கை பார்க்கின்றனர்.  இவ்வாறு தடையை மீறி செல்பவர்கள் வனப்பகுதிக்குள் மது அருந்துவதோடு பாட்டில்களை ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். உடைந்த பாட்டில்களை மிதிக்கும் வனவிலங்குகள் காயம் ஏற்பட்டு சித்ரவதைக்கு ஆளாகின்றன. மேலும் இவர்கள் காட்டில் தீ வைத்து சமைப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் ஒரு பயங்கர தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தடையை மீறி யாரும் செல்லாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம், வனத்துறையினருடன் கிராம வனக்குழுவினர், வருவாய்த்துறையினர் மற்றும் உள்ளாட்சித் துறையினர் இணைந்த குழுவினரை நியமிக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: