பழநி அருகே அரசு பள்ளி தொட்டியை சுத்தம் செய்யும் மாணவர்கள்: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

பழநி: பழநி அருகே ஆயக்குடி அரசு பள்ளியில் தண்ணீர் தொட்டியை மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே ஆயக்குடியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள தரைநிலை தொட்டியை மாணவர்கள் சிலர் சுத்தம் செய்வது போன்ற வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் தொட்டியின் மேல்புறம் 3 மாணவர்கள் நின்று தண்ணீரை இறைத்து கொண்டிருக்கின்றனர்.

தொட்டிக்குள் ஒரு மாணவர் மேல் சட்டை இல்லாமல், பேண்ட் மட்டும் அணிந்தபடி தண்ணீர் எடுத்து கொடுப்பதாக வீடியோ முடிவடைகிறது. மாணவர்கள் தண்ணீர் தொட்டிக்குள் இறங்குவதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் தங்களது செல்போனில் அந்த காட்சியை படம் பிடித்துள்ளனர். மாணவர்களை வைத்து இதுபோன்ற விபரீத பணிகளில் ஈடுபடாமல் தடுக்க கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோரும், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: