×

அழிந்து வரும் நிலையில் உள்ள பிளம்ஸ் பழ விவசாயத்தை காக்க அரசு முன் வருமா?: கொடைக்கானல் விவசாயிகள் எதிர்பார்ப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் அழிந்து வரும் பிளம்ஸ் பழம் விவசாயத்தை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல், ஊட்டி ஆகிய மலைப்பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய பழ வகைகளில் பிளம்ஸ் முக்கியமானது. ஒரு பிளம்ஸ் பழம் ஒரு ஆப்பிளை விட அதிக சத்து மிகுந்தது. விட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. கொடைக்கானல் மலைப்பகுதியில் வளர்ந்து வரும் சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் காரணமாக பிளம்ஸ் பழ மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.கொடைக்கானல் பெருமாள் மலையை அடுத்து வில்பட்டி, அட்டுவம்பட்டி, குறிஞ்சி நகர், பேத்துப்பாறை, வடகவுஞ்சி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இந்த பிளம்ஸ் பழ மரங்கள் அதிகமாக இருந்தன. மே மாதங்களில் இந்த பழங்கள் அதிக அளவில் கிடைக்கும். ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை துவக்க மகசூல் காலத்தில் விற்கப்படும். பிறகு சீசன் காலங்களில் சராசரியாக கிலோ ரூ.50 முதல் ரூ.80க்குள் விற்பனைக்கு கிடைக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கொடைக்கானலில் பிளம்ஸ் பழ மகசூல் வெகுவாக குறைந்து வருகிறது.

இந்த பிளம்ஸ் பழங்கள் அறுவடை செய்த பின்னர் சந்தைப்படுத்துதலிலும் பல்வேறு சிரமங்கள் இருந்து வருகிறது. நிலையான விலை கிடைக்காத சூழல் ஏற்பட்டு பிளம்ஸ் பழங்கள் விவசாயத்தில் விவசாயிகள் அக்கறை காட்டாத ஒரு சூழலும் ஏற்பட்டுள்ளது. பிளம்ஸ் பழங்களின் விவசாயத்தை காப்பதற்கு அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அரசு நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் பிளம்ஸ் பழங்களில் கிடைக்கக்கூடிய ஜாம், உள்ளிட்ட பழ ரசங்கள் தயாரிக்கக் கூடிய சிறு தொழிற்சாலைகளை அரசு உருவாக்கினால் பிளம்ஸ் விவசாயம் காக்கப்படும். விவசாயிகள் கூறும்போது, ‘‘கொடைக்கானலில் விளையக்கூடிய பிளம்ஸ் பழங்கள் மிகுந்த ருசியாக இருக்கும். இதற்கு கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நல்ல கிராக்கி உள்ளது. பலநூறு ஏக்கர் அளவிற்கு பிளம்ஸ் பழங்கள் விளைச்சல் கண்ட சூழலில், தற்போது குறைந்த ஏக்கர் அளவிலே சாகுபடி செய்யப்படுகிறது. பிளம்ஸ் பழ மரங்கள் வெட்டப்பட்டு இப்பகுதி நிலங்கள் வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டு வருகிறது. எனவே, அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கக்கூடிய பிளம்ஸ் பழங்களின் விவசாயத்தை அரசு காப்பாற்ற வேண்டும்’’ என்றனர்.

Tags : government , Will ,government come ,rescue , endangered plums?
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...