ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களுக்கு இயக்கப்படும் ஓட்டை உடைசல் அரசு பஸ்களால் பயணிகள், மாணவர்கள் பரிதவிப்பு

* பாதியில் படுத்துக்கொள்வதால் நடுவழியில் திண்டாட்டம்

* மழை பெய்தால் குடையோடு பயணிக்கும் கொடுமை

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் டவுன் பஸ்கள் அனைத்தும் ஓட்டை உடைசல் பஸ்களாக இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் பெரும் அவதியடைகின்றனர். எனவே மாவட்டத்தில் இயக்கப்படும் ‘கண்டமான’ பஸ்களை மாற்றி புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பஸ்களின் நிலையை கேட்கவே வேண்டாம். அதுவும் கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்கள், ஓட்டை உடைசலாகவே இருக்கின்றன. எப்போது பிரேக் டவுன் ஆகி நிற்கும் என்று யாருக்குமே தெரியாது. பஸ்சை எடுக்கும்போதே பழுதாகி செட்டிலேயே நிறுத்தப்படும் பஸ்கள் ஏராளம். இதனால் தங்கள் ஊருக்கு ஒன்றிரண்டு பஸ்களில் கூட வெளியூர் செல்ல முடியாமல் கிராம மக்கள் தவிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே, கிராமப்புறங்களை நகர்ப்புறங்களுடன் இணைத்து சாலைகள் அமைக்கப்பட்டு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம்  டெப்போவில் இருந்து  சத்திரக்குடி, பெரியபட்டினம்,  புதுமடம், பொட்டகவயல், கீழக்கோட்டை,  அழகன்குளம்,  கிளியூர் உட்பட ஏராளமான  கிராமங்களுக்கு  டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ராமேஸ்வரத்திலிருந்து  பாம்பன்,  மண்டபம், தனுஷ்கோடி  உட்பட பல இடங்களுக்கு  இயக்கப்படுகின்றன. பரமக்குடியில் இருந்து  பாண்டியூர், காமன்கோட்டை,  சத்திரக்குடி,  மென்னந்தி, நாகாச்சி,  வீரகனூர்,  செவ்வூர், அபிராமம்,  செம்மங்குடி, முதுகுளத்தூர்,  காக்கூர்  உட்பட இன்னும் ஏராளமான கிராமங்களுக்கு  டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருவாடானை பகுதியிலிருந்து  இயக்கப்படும் டவுன் பஸ்கள், சிவகங்கை மாவட்டம்,  தேவகோட்டை டெப்போவில் இருந்து  இயக்கப்படுகிறது. திருவாடானையில் இருந்து  ஆனந்தூர், திருவெற்றியூர்,  கள்ளிக்குடி,  சோழாந்தூர்,  ஆர்.எஸ்.மங்கலம்,  கொக்கூரணி, காரங்காடு,  ஓரியூர், தேவகோட்டை  ஆகிய ஊர்களுக்கு  டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் மிகவும் மோசமாக, கண்டமான நிலையிலே இயக்கப்படுகின்றன.குறிப்பாக, அரசு டவுன் பஸ்கள் அனைத்திலும் மழை பெய்தால், மேற்கூரையில் இருந்து தண்ணீர் அருவியில் இருந்து வருவதுபோல் பஸ்சிற்குள் கொட்டும். இரவு நேரத்தில் ஹெட்லைட்டுகள் அனைத்தும் சிமினி விளக்கு போல் எரிகின்றன. இதனால் டிரைவர்கள் ஒருவித அச்சத்துடனே மெதுவாக பஸ்களை இயக்குகின்றனர். எதிரே வரும் வாகனம் என்னவென்றே தெரியாது. பல பஸ்களில் இருக்கைகள் உடைந்து பயணிகளை பதம் பார்த்து விடுகிறது. சில இடங்களில் இருக்கைகள் இல்லாமலும் உள்ளன. ஜன்னல் ஷட்டரும் சரிவர வேலை செய்வதில்லை.

இதனால் மழை பெய்யும்போது மழைநீர் பஸ்சுக்குள் செல்கின்றன. இதனால் ஜன்னலோரத்தில் பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய இயலாத நிலை உள்ளது. மேலும், டயர்கள் பழுதாகி அடிக்கடி பஞ்சர் ஆகி விடுகின்றன. இதனால் வெளியூர்களுக்கு பணி நிமித்தமாக செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் அவதியடைகின்றனர். ஒட்டுமொத்தமாக பெயரளவில் மட்டுமே அரசு பஸ்கள் செயல்படுகின்றன. இவற்றை சரி செய்து இயக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்து அரசு டவுன் பஸ் டிரைவர்கள் கூறுகையில், ‘‘பொதுவாக எல்லா பஸ்களிலும் ஸ்டெப்னி, ஜாக்கி, லீவர் உள்ளிட்டவைகள் இருக்க வேண்டும். ஒரு பணிமனையை சேர்ந்த 5 பஸ்களுக்கு ஒரு பஸ்சில் மட்டுமே இவைகள் இருக்கும். டயர் பஞ்சரானால் அதை சரி செய்ய மற்றொரு பஸ் வரும் வரை காத்திருந்து மாற்ற வேண்டும். இரவு நேரத்தில் டவுன் பஸ்களில் ஹெட்லைட்டில் இருந்து போதிய வெளிச்சம் கிடைக்காது. வாகனத்தை மெதுவாகத்தான் ஓட்ட வேண்டும். பலமுறை விபத்து நேர்ந்துள்ளது. சிறிய விபத்துக்களை பேசி தீர்த்துக்கொள்வோம். பெரிய விபத்துக்கள் மட்டுமே வழக்கு பதிவாகும். தரமில்லாத ஹெட்லைட்களால்தான் இரவில் அதிகமாக விபத்துக்கள் நடக்கின்றன’’ என்றார்.

தரமான சாலை இருந்தும் பஸ்கள் சரியில்லையே?

இதுகுறித்து திருவாடானை ஒன்றிய பெருந்தலைவர் முகம்மது முக்தார் கூறுகையில், ‘‘கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என கருதப்படுகிறது. கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடையும். முன்பு நகர் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் சாலை வசதி மோசமாக இருக்கும். அதனால் அதிகாரிகள் புதிய பஸ்களை  இயக்காமல் பழைய பஸ்களை இயக்கி வந்தனர். ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லை. கிராம சாலைகள் அனைத்தும் நகர சாலைகளை விட நன்றாக உள்ளது. இருப்பினும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஓட்டை உடைசல் பஸ்களையே இயக்குகின்றனர். இதனால் கிராமப்புறத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மழைக்காலங்களில் பஸ் ஒழுகி மாணவர்களின் சீருடையும், புத்தகங்களும் நனைந்து விடுகின்றன.  இதுபோன்ற இன்னல்கள் ஏற்படாத வகையில் மாவட்டத்தில்  ஓட்டை உடைசல்களுடன் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களை மாற்றி நல்ல தரமான புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருவாடானை பகுதி மக்களின் நலன் கருதி, அங்கு போக்குவரத்து பணிமனை ஒன்றையும் அமைக்க வேண்டும். இதற்கான தீர்மானம் இயற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

கண்டமான பஸ்களுக்கு எப்சி வழங்கியது எப்படி?

இதுகுறித்து திருவாடானை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நாகநாதன் கூறுகையில், ‘‘டூவீலர் இல்லாதவர்கள், முதியவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், கிராமப்புறங்களை சேர்ந்த ஏழைப்பெண்கள் கூலித்தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் நகர்ப்புறங்களுக்கு தினமும் சென்று வரவேண்டிய நிலை உள்ளது. இவர்கள் அரசு டவுன் பஸ்களை நம்பியே உள்ளனர். திருவாடானை பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்கள், படுமோசமாக உள்ளன. இதுபோன்ற பஸ்களுக்கு எப்படி ‘எப்சி’ சான்றிதழ் வழங்குகின்றனர் என தெரியவில்லை. தனியார் பஸ்களுக்கு மட்டும் கிடுக்குப்பிடி போடும் அதிகாரிகள், இப்படி கண்டமான பஸ்களுக்கு எப்படி சான்றிதழ்கள் வழங்குகின்றன என தெரியவில்லை. டவுன் பஸ்களை பொறுத்தவரை பாதி வழியில் பயணிகளை பரிதவிக்க விடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. எனவே அரசு சிறப்பு நிதி ஒதுக்கி ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களுக்கு புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

Related Stories: