கோடை கால தீ தடுப்பு நடவடிக்கை தீவிரம்: தமிழக மலைப்பகுதிகளில் டிரெக்கிங் செல்ல தடை

சேலம்: தமிழகம் முழுவதும் கோடை காலத்தையொட்டி, வனப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு (டிெரக்கிங்) தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மேட்டூர் பச்சமலை, தேனி குரங்கணி, ஆத்தூர் கல்வராயன்மலை, களக்காடு முண்டன்துறை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கான பாதைகள் (டிரெக்கிங்) உள்ளன. இந்த வனப்பகுதியில் ஆண்டு முழுவதும் வனத்துறையின் அனுமதியை பெற்று, மலையேற்ற பயிற்சியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே மலையேற்ற பயிற்சிக்கு என தனிக்குழுக்களும் இயங்கி வருகிறது. கடந்த 2018 மார்ச் மாதம், தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த சென்னை ஐடி நிறுவன ஊழியர்கள், திருப்பூர், ஈரோடு பகுதி இளைஞர்கள் உட்பட 21 பேர் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

இதையடுத்து கோடை காலத்தில் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி கிடையாது என்ற முடிவுக்கு வனத்துறை வந்தது. தற்போது மாநிலம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. ஆங்காங்கே மலைப்பகுதிகளில் காட்டு தீ பற்றி எரிகிறது. இதனால், மலைப்பாதைகளில் மலையேற்ற பயிற்சி மேற்கொள்ள தடை விதித்து வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்ட வன அலுவலர்களுக்கும் இதற்கான உத்தரவு ஆணையை வழங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர்கள், தனித்தனியே அந்தந்த மாவட்டத்தில் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கோடை கால தீ விபத்து நேரங்களில், காட்டிற்குள் சென்று யாரும் சிக்கி விடக்கூடாது என்பதற்காக மலையேற்ற பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி கேட்டு வந்த விண்ணப்பங்களை நிராகரித்துவிட்டோம். வரும் ஜூலை மாதம் வரை இந்த தடை ஆணை நீடித்திருக்கும். அதேவேளையில் மலைப்பகுதிகளில் தீ தடுப்பு பணிகளை மேற்கொள்ள வன ஊழியர்களை முடிக்கி விட்டுள்ளோம்’’ என்றனர்.

தடையை மீறி குரங்கணியில் டிரெக்கிங்?

தேனி மாவட்ட வனத்துறை குரங்கணியில் இருந்து டிரெக்கிங் செல்ல கடந்த 15ம் தேதி முதல் தடை விதித்தது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை நீடிக்கும் எனவும் வனத்துறை தெரிவித்தது. ஆனால் குரங்கணியில் இருந்து தடையை மீறி வனத்துறையினரின் ஆதரவோடு சிலர் மலையேற்றம் சென்று வருவதாக புகார் எழுந்துள்ளது. வனப்பகுதிக்குள் செல்பவர்கள் மதுபாட்டில்களை எடுத்துச் செல்வதோடு அங்கேயே தீமூட்டு சமையல் செய்து சாப்பிட்டு வருவதால் காட்டுத்தீ உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே அதை தடுத்து நிறுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: