நாமக்கல் அருகே சூதாட்டத்தின் போது சிக்கின; போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பில் கம்பி எண்ணும் பந்தய சேவல்கள்

* 5 நாளாக கூவுவதால் போலீசார் அவதி

* தீவனம் வைத்து கவனிப்பு

நாமக்கல்: நாமக்கல் அருகே சூதாட்டத்தில் ஈடுபடுத்திய 6 பந்தய சேவல்களை பறிமுதல் செய்த போலீசார் லாக்கப்பில் அடைத்து பராமரித்து வருகின்றனர். முட்டை மாவட்டமான நாமக்கல் நகர போலீஸ் ஸ்டேஷன் நேற்று எப்போதும்போல பரபரப்பாக இருந்தது. காவலர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். திடீரென போலீஸ் ஸ்டேஷன் உள்ளிருந்து அடுத்தடுத்து சேவல் கூவுகிற சத்தம் கேட்டது. இடைவிடாமல் இந்த சத்தம் ஒலித்ததால் என்ன ஏதென்று விசாரித்த போது பெரிய கதையே தெரிய வந்தது. நாமக்கல் அருகே கூலிப்பட்டி வனப்பகுதியில், கடந்த 19ம் தேதி சிலர் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற நாமக்கல் போலீசார் 5 பேரை கைது செய்தனர். 6 பந்தய சேவல்கள், 9 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டனர்.

ஆனால் பறிமுதல் செய்த 6 பந்தய சேவல்களை என்ன செய்வது என தெரியாமல், காவல்நிலையத்தில் உள்ள லாக்கப்பில், கடந்த 5 நாட்களாக அடைத்து வைத்து போலீசார் பராமரித்து வருகிறார்கள். அவை இடைவிடாது கூவிக்கொண்டே இருக்கிறது. இந்த சத்தம் அங்கு வேலை செய்யும் போலீசார் மற்றும் வந்து செல்லும் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தையும் நீதிமன்றத்தில்தான் ஒப்படைக்க வேண்டும். அதே போல சேவல்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க கால்நடை பராமரிப்புத்துறையினர் சான்றிதழ் பெற வேண்டும் என போலீசார் கூறுகிறார்கள். பல்வேறு பணிகளுக்கு மத்தியில், இதை செய்ய முடியாமல் நாமக்கல் போலீசார் தவிக்கிறார்கள். இதனால் வேறு வழியின்றி தினமும் 6 சேவல்களுக்கும் அரிசி, தண்ணீர் என வேளா வேளைக்கு உணவு பொருட்களை கொடுத்து கவனித்து வருகிறார்கள்.

இங்குள்ள பல போலீசார், தங்களின் 25 வருட அனுபவத்தில் இப்படி ஒரு வழக்கை இப்போது தான் முதன் முதலாக பார்க்கிறோம். உயர் அதிகாரிகள் என்ன முடிவு செய்கிறார்களோ, அதற்கு பிறகு  தான் சேவல்களை லாக்கப்பில் இருந்து வெளியேற்ற முடியும் என்கிறார்கள்.

Related Stories: